/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார்த்திகை தீபம்; அகல் விளக்கு விற்பனை ஜோர்
/
கார்த்திகை தீபம்; அகல் விளக்கு விற்பனை ஜோர்
ADDED : டிச 01, 2025 05:02 AM

பொள்ளாச்சி: கார்த்திகை தீப விழாவையொட்டி, பொள்ளாச்சி நகரின் பல இடங்களில் அகல் விளக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது.
சிவபெருமான், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திர நாளில் அக்னியாக தோன்றி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்நாள், கார்த்திகை தீப பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில், நடப்பாண்டு கார்த்திகை தீப விழா, வரும் 3ல் கொண்டாடப்படுகிறது. மக்கள் பலரும், வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், மண் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தவும் உள்ளனர்.
அவ்வகையில், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் அகல்விளக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. பலவிதமான வடிவங்களில், அகல் விளக்குகள் சிறியதும் பெரியதுமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சாதாரண அகல் விளக்குகள், பத்து ரூபாய்க்கு, 12 எண்ணிக்கையும், மற்றொரு ரகம், பத்து ரூபாய்க்கு, 10 விளக்குகளும், சிறிது வேலைபாடுகள் உள்ள விளக்குகள் 20ரூபாய்க்கு, 5விளக்குகள் என, பல்வேறு நிலைகளில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும், ஆர்வமுடன் அகல் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது:
சாதாரண விளக்குகள் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும், வேலைப்பாடுகள் உள்ள விளக்குகள் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக மழை பெய்து கொண்டிருப்பதால், அகல் விளக்குகளின் வரத்து குறைந்தும், அகல்விளக்குகளில் விலையும் அதிகரித்து உள்ளது. ஒரு ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அகல் விளக்குகள் விற்கப்படுகின்றன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

