/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
7 ஆதார் கார்டுகளுடன் 15 பெயர்களில் உலா கேரள சினிமா தயாரிப்பாளரின் தில்லாலங்கடி வேலை
/
7 ஆதார் கார்டுகளுடன் 15 பெயர்களில் உலா கேரள சினிமா தயாரிப்பாளரின் தில்லாலங்கடி வேலை
7 ஆதார் கார்டுகளுடன் 15 பெயர்களில் உலா கேரள சினிமா தயாரிப்பாளரின் தில்லாலங்கடி வேலை
7 ஆதார் கார்டுகளுடன் 15 பெயர்களில் உலா கேரள சினிமா தயாரிப்பாளரின் தில்லாலங்கடி வேலை
ADDED : செப் 10, 2025 03:50 AM

கோவை:பண மோசடி புகார் அளித்த கேரள சினிமா தயாரிப்பாளர் ஏழு ஆதார் கார்டுகள் வைத்திருப்பதும், 15 பெயர்களை பதிவு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்ததால், போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவையை சேர்ந்தவர் சஞ்சய் குமார் ரெட்டி, 46; சினிமா தயாரிப்பாளர். கடந்தாண்டு மார்ச் மாதம், 'பேசஸ்' என்ற மலையாள திரைப்படம் தயாரித்தார்.
முன் தயாரிப்பு பணிகளை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நிறுவனத்திடம் கொடுத்து விட்டு, ஜனவரியில் மனைவி லாவண்யாவுடன் லண்டன் சென்றார்.
ஜாமின் தள்ளுபடி
இச்சூழலில், சஞ்சய் குமார் ரெட்டி இறந்து விட்டதாக, போலி இறப்பு சான்றிதழ் தயாரித்து, பேசஸ் திரைப்படத்தை, கோவைப்புதுாரைச் சேர்ந்த 'அங்காளம்மன் பிலிம்ஸ்' நிறுவனத்துக்கு விற்று, சென்சார் பணிகளை முடித்தது தெரிந்தது.
பணிகளை முடித்து திரைப்படத்தை, 6 கோடி ரூபாய்க்கு, வேறொரு தயாரிப்பாளருக்கு விற்று, 20 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றதாக, கேரள போலீஸ் டி.ஜி.பி.,யிடம் சஞ்சய்குமார் ரெட்டி புகார் அளித்தார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் பாலரிவட்டம் போலீசார், போலி இறப்பு சான்றிதழ் பயன்படுத்தி, மோசடி செய்ததாக, எர்ணாகுளத்தை சேர்ந்த திரைப்பட இயக்குநர் நீலேஷ், 'சலச்சித்திரம் பிலிம்ஸ்' நிறுவன உரிமையாளர் ராஜேஷ், கோவை மாவட்டம், கோவைபுதுாரை சேர்ந்த முருகேசன், திருச்சி மாவட்டம், பொன்மலையை சேர்ந்த ஆரோக்கியராஜ் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.
அவர்கள், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடியானது. கேரள தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ள நால்வரையும் தேடி வருகின்றனர்.
ஆடியோ
இச்சூழலில், லண்டனில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சய்குமார் ரெட்டியை தொடர்பு கொண்ட நபர், கேரளாவில் உள்ள வழக்கை வாபஸ் பெற மறுத்தால், அவரது மகளை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டும் ஆடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால், சஞ்சய்குமார் ரெட்டி, 71 லட்சம் ரூபாயை பெற் றுக் கொண்டு, மோசடி செய்து விட்டதாக, முருகேசன் கொடுத்த புகார் அடிப்படையில், கோவையில் வழக்கு பதியப் பட்டுள்ளது.
இந்நிலையில், சஞ்சய்குமார் ரெட்டி ஒரு மோசடி பேர் வழி என்றும், ஏற்கனவே அவர் மீது மோசடி வழக்கு இருப்பதாகவும் கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் கார்த்திகேயன் கூறினார்.
அவர் மேலும் கூறிய தாவது:
ஜூலை 30ல் முருகேசனிடம் பெற்ற புகாரின் படி, முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. புகார் கொடுத்தவர்கள், சஞ்சய்குமார் ரெட்டி வங்கி கணக்கிற்கு குறிப்பிட்ட தொகையை அனுப்பியது தெரிந்தது. சஞ்சய்குமார் ரெட்டி ஏழு ஆதார் கார்டுகள் வைத்துள்ளார். அவரை மிரட்டுவதாக வெளியான ஆடியோ போலியானது.
போலி ஆவணங்கள்
அவரது ஆதரவாளர்களை வைத்து ஆடியோ பதிவு செய்துள்ளார். அந்த ஆடியோ பதிவுகளையே, தற்போது பல்வேறு தரப்புக்கும் அனுப்பி வருகிறார். இவர் மீது ஏற்கனவே மோசடி வழக்கு உள்ளது. இதற்கு முன்னரும் இதேபோல், ஆடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளார்.
அவர் நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் கொடுத்ததாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சஞ்சய்குமார் ரெட்டி என்பதே, அவரது இயற்பெயரா என தெரியவில்லை. அவர், 15க்கும் மேற்பட்ட பெயர்களை பதிவு செய்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.