/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிட்டீஸ் அதலெடிக் மீட்' ; மாணவ, மாணவியர் அசத்தல்
/
'கிட்டீஸ் அதலெடிக் மீட்' ; மாணவ, மாணவியர் அசத்தல்
ADDED : பிப் 12, 2025 11:53 PM

கோவை; தி அமெச்சூர் அதலெடிக் டோர்னமென்ட் அசோசியேசன் ஆப் கோயம்புத்துார் சார்பில், 37வது 'கிட்டீஸ் அதலெடிக் மீட்' எனும் சிறுவர்களுக்கான தடகள போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது.
தொழிலதிபர் ஜி.வரதராஜ் நினைவாக நடந்த இப்போட்டியில், கோவை வருவாய் மாவட்ட அளவில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் என, 34 பள்ளிகள் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திருந்தன. 6, 8, 10, 12 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர், 903 பேர் பங்கேற்றனர்.
மென்பந்து எறிதல், 50 மீ., 60 மீ., 80 மீ., 100 மீ., 300 மீ., 400 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம், தடை தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில், மாணவர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தினர்.
இதில், 6 மற்றும், 8 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியும், 10 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நேவி சில்ட்ரன் பள்ளியும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆர்.ஜெ., மெட்ரிக் பள்ளியும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.
அதேபோல், 6 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், ஆதித்யா குளோபல் பள்ளியும், 8 வயதுக்குட்பட்டோர் பிரிவில், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியும், 10, 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆர்.ஜெ., மெட்ரிக் பள்ளியும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு, மூத்த ஆடிட்டர் வெங்கட்ரமணன், சர்வஜன பள்ளி செயலாளர் நாராயணசாமி, தி அமெச்சூர் அதலெடிக் டோர்னமென்ட் அசோசியேசன் ஆப் கோயம்புத்துார் செயலாளர் வெள்ளிங்கிரி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

