/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொடிசியா - சேரன் மாநகர் திட்டச்சாலை; 15 ஆண்டு காத்திருப்புக்கு தீர்வு!
/
கொடிசியா - சேரன் மாநகர் திட்டச்சாலை; 15 ஆண்டு காத்திருப்புக்கு தீர்வு!
கொடிசியா - சேரன் மாநகர் திட்டச்சாலை; 15 ஆண்டு காத்திருப்புக்கு தீர்வு!
கொடிசியா - சேரன் மாநகர் திட்டச்சாலை; 15 ஆண்டு காத்திருப்புக்கு தீர்வு!
ADDED : ஜூன் 06, 2025 06:09 AM
கோவை; கோவை 'கொடிசியா' அருகில் இருந்து சேரன் மாநகர் வரை, உத்தேச திட்டச்சாலை உருவாக்குவதற்கு தேவையான நிலங்களை தானமாக பெறுவதற்கு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் முயன்று வருகின்றனர். அறிவிப்பு வெளியிட்டு, 15 ஆண்டுகள் கழித்து, இத்திட்டச்சாலை உருவாக இருக்கிறது.
கோவையில், 2010ல் செம்மொழி மாநாடு நடந்தபோது, கொடிசியா - தண்ணீர் பந்தல் 'ரவுண்டானா' வழிச்சாலை முதல் சத்தியமங்கலம் சாலை வரை, விளாங்குறிச்சி விரிவுத்திட்டம் எண்: 7 மற்றும் 8ன்படி, திட்டச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கீதாஞ்சலி மெட்ரிக் பள்ளிக்கு அருகே துவங்கி, என்.ஆர்.ஐ., கார்டனில் உள்ள சாலையில் இணைந்து, எஸ்.ஆர்., அவென்யூ, கோ ஆப்ரேட்டிவ்-இ காலனி மற்றும் ஸ்ரீராகவேந்திரா அவென்யூ வழியாக சேரன் மாநகர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள, 4வது பஸ் ஸ்டாப் வழியாக திட்டச்சாலையில் இணைந்து, விளாங்குறிச்சி வழியாக சத்தியமங்கலம் ரோடு சென்றடையும் வகையில், திட்டச்சாலை வழித்தடம் இறுதியானது.
இச்சாலை அமைந்தால், விளாங்குறிச்சி ரோடு மற்றும் காளப்பட்டி சாலைக்கு மாற்றாக அமையும். வாகனங்கள் சுற்றிச்செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
ஆனால், 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது; அ.தி.மு.க., ஆட்சியில், 10 ஆண்டுகள் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, முதல்வரின் தனிப்பிரிவுக்கு விளாங்குறிச்சி குடியிருப்பு பகுதி நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
திட்டச்சாலை அமையும் இடங்களை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் நகரமைப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். நில உரிமையாளர்கள் பலரும், தங்களது நிலத்தை தானமாக வழங்க முன்வந்தனர்.
ஒருவர் மட்டும் தனக்கு சொந்தமான, 20 சென்ட் நிலத்தை வழங்க முன்வரவில்லை. அதற்கு மாற்றாக, தனியார் கல்லுாரி நிர்வாகத்துக்குச் சொந்தமான நிலத்தை வழங்க ஆலோசிக்கப்பட்டது; கல்லுாரி நிர்வாகமும் அந்நிலத்தை வழங்க முன்வந்துள்ளது. அதனால், 15 ஆண்டுகளுக்கு பின், திட்டச்சாலை உருவாவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
மதிப்பு 'ஜீரோ'
மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், 'திட்டச்சாலை அமையும் பகுதியில், தனியார் கல்லுாரிக்கு சொந்தமான இடத்தின் மதிப்பு ஜீரோ என பத்திரப்பதிவு துறையில் பதிவாகியிருக்கிறது. அதை மாற்றம் செய்வதற்கான பணி நடந்து வருகிறது; ஓரிரு வாரத்தில் முடிந்து விடும். நில உரிமையாளர்கள் தானமாக நிலங்களை வழங்குகின்றனர். ஏற்கனவே உள்ள, 30 அடி ரோட்டுடன் இணைக்க இருக்கிறோம்; அதன்பின், 60 அடி ரோடு கிடைக்கும்' என்றனர்.