தி.மு.க.வுக்கு ஆதரவு தொடரும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை முடிவு
தி.மு.க.வுக்கு ஆதரவு தொடரும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை முடிவு
ADDED : ஏப் 08, 2026 06:35 AM
கோவை: தி.மு.க.வுக்கே தொடர்ந்து ஆதரவு அளிப்போம், என, கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை மாநிலத் தலைவர் தேவராஜன் தெரிவித்தார்.
பேரவையின் கூட்டம் காளப்பட்டியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் தேவராஜன், மாநில அமைப்பாளர் பிரேம்குமார் ஆகியோர் கூறியதாவது:
1971ம் ஆண்டு முதல் தி.மு.க. கூட்டணியை கொங்கு வேளாளர் பேரவை ஆதரித்து வருகிறது. இந்தத் தேர்தலிலும் ஆதரவு தொடரும். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கொங்கு வேளாளர் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்.
எங்கள் குலதெய்வமான தீரன் சின்னமலைக்கு வெண்கல சிலையை அமைத்துக் கொடுத்தார். தற்போதைய முதல்வர் ஸ்டாலின், சென்னையில் சிலை அமைத்துக் கொடுத்தார்.
கோவையில் நிறைவு பெறாத மேம்பாலத்தை முடித்துக் கொடுத்தார். மருதமலை கோயிலில் 40 கோடி ரூபாய் செலவில் லிப்ட் அமைத்தார். தங்க நகை தொழிலாளர்களுக்கு தொழில்பூங்கா அமைத்துக் கொடுத்தார்.
எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த பழனிசாமி முதல்வராக இருந்த போது எதையும் செய்து தரவில்லை. எனவே, இந்தத் தேர்தலிலும் தி.மு.க.வுக்கு ஆதரவை தொடர்வோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
