/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரச்னைகளை சவால்களாக கருத வேண்டும்
/
பிரச்னைகளை சவால்களாக கருத வேண்டும்
ADDED : செப் 01, 2011 01:52 AM
கோவை : ''நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும் நமக்கு கிடைக்கும் சவால்களாகவும், வாய்ப்புகளாகவும் கருத வேண்டும்,'' என, பெங்களூரு 'நிமான்ஸ்' மனநல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் அரவிந்தராஜ் பேசினார்.குனியமுத்தூர், கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி முதுநிலை சமூகப்பணித்துறை மற்றும் குறிச்சி தொழிற்பேட்டை லயன்ஸ் சங்கம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 'வாழ்க்கை திறன் மேம்பாடு' பயிலரங்கு நடந்தது.கல்லூரி முதல்வர் சுந்தரராமன் தலைமை வகித்தார்.
பெங்களூரு 'நிமான்ஸ்' மனநல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் டாக்டர் அரவிந்தராஜ் பேசியதாவது:இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் இறக்கும் வரை தங்களது வாழ்க்கையை கண்டிப்பாக வாழ்ந்து காட்ட வேண்டும். பிரச்னை என்பது ஏழை, பணக்காரர், ஆண், பெண் பேதமன்றி அனைவருக்கும் பொதுவானது; தன்மை சற்று வேறுபட்டிருக்கலாம். துன்பம் இன்றி யாரும் வாழ முடியாது.நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தும் நமக்கு கிடைக்கும் சவால்களாகவும், வாய்ப்புகளாகவும் கருத வேண்டும். பிரச்னைகள் குறித்து சிந்திக்கும் போதுதான் அதற்கான முக்கிய காரணங்களை அறிய முடியும்; தோல்விக்கான காரணங்களும் கிடைக்கும்.பிரச்னைகளை சரியான முறையில் தீர்க்கும் வழிமுறைகளை கண்டறிந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். பிரச்னைகள் வந்தால் மவுனமாக இருப்பதும், ஆதங்கமாக பேசுவதாலும் தீர்வு கிடைக்காது. கோபம்கொள்ளுதல், சண்டையிடுதல் உள்ளிட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவது 'எதிர்மறையான எண்ணங்களாகும்'. எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படும் போது சகமனிதர்களுடன் பகை ஏற்படுவது மட்டுமின்றி உயிரை கூட மாய்த்து கொள்ளும் நிலை உருவாகும்.இத்தகைய பிரச்னைகளிலிருந்து விடுபட வாழ்க்கை திறன் மேம்பாடு பயிற்சி உதவும். இப்பயிற்சி குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது; இது தவறானது. அனைவரும் இப்பயிற்சி பெறுவது மூலம் சிறந்த மனிதர்களாக வர முடியும். வாழ்க்கை திறன் மேம்பாடு என்பது பெரிய பிரச்னைகளுக்குதான் பயன்படும் என்றில்லை, அன்றாட வாழ்வில் நடக்கும் சிறு பிரச்னைகளுக்கு இவற்றை பயன்படுத்துவதன் மூலம் தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஏற்பாடுகளை கல்லூரி சமூகப்பணித்துறை தலைவர் அழகர்சாமி,பேராசிரியர் மோகன்பிரசாந்த் ஆகியோர் செய்திருந்தனர்.