/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தகவல் தராமல் வாகனங்கள் "பறிமுதல்' டிராபிக் போலீஸ் மீது மக்கள் அதிருப்தி
/
தகவல் தராமல் வாகனங்கள் "பறிமுதல்' டிராபிக் போலீஸ் மீது மக்கள் அதிருப்தி
தகவல் தராமல் வாகனங்கள் "பறிமுதல்' டிராபிக் போலீஸ் மீது மக்கள் அதிருப்தி
தகவல் தராமல் வாகனங்கள் "பறிமுதல்' டிராபிக் போலீஸ் மீது மக்கள் அதிருப்தி
ADDED : செப் 27, 2011 11:55 PM
கோவை : கோவை நகரில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை மீட்டு, எடுத்துச் செல்லும் போக்குவரத்து போலீசார், அதுபற்றிய தகவல்களை வாகன உரிமையாளர்களுக்கு தெரிவிப்பதில்லை.
இதனால், தங்களது வாகனம் திருட்டுப்போய்விட்டதாக நினைத்து பலரும் அலறியடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. போக்குவரத்து போலீசாரின் குளறுபடி மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கமிஷனர் அமரேஷ்புஜாரி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கோவை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரால் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன; ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். இதைத்தடுக்க, முக்கிய சாலைகளில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை நடத்தி, விதி மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். நகரில் நாளொன்றுக்கு 90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது; கடந்த ஆண்டில் மட்டும் 3.5 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இத்தொகை, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் மூலமாக அரசு கருவூலத்தில் செலுத்தப்படுகிறது.அபராதம் விதிப்பு நடவடிக்கைகளில் போலீசார் மற்றும் அதிகாரிகளில் சிலர் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. 'ஸ்பாட் பைன்' போலி ரசீது புத்தகம் அச்சிட்டு வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட போலீஸ் எஸ்.ஐ., சுரேஷ் என்பவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மற்ற போலீசார், அதிகாரிகள் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்குவரத்து போலீசாரின் அத்துமீறல் குறித்தும் புகார்கள் எழுந்துள்ளன.பூ மார்க்கெட் பகுதியில் வசிக்கும் கோபால்(50) என்பவர், தனது உறவினர் முருகன் (49) என்பவருடன் ஸ்கூட்டரில் சென்றார். பூ மார்க்கெட்டில் 'நோ பார்க்கிங்' பகுதியில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றார். திரும்பி வந்த போது ஸ்கூட்டரை காணவில்லை. போலீசார் எடுத்துச் சென்றுவிட்டதாக அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர். தனது ஸ்கூட்டரை எடுத்துச் சென்ற போலீசார் யார்? எந்த ஸ்டேஷனுக்குச் சென்று மீட்பது? என குழப்பமடைந்த இவர், வாடகை ஆட்டோ பிடித்து ஆர்.எஸ்.புரம் சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்.அங்கிருந்த போலீசார், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்குச் செல்லுமாறு விரட்டினர். மீண்டும் ஆட்டோவில் அங்கு சென்ற கோபால், போலீஸ் அதிகாரி ஒருவரின் உதவியால் வாகனத்தை மீட்டுச் சென்றார்; அதற்குள் ஒரு மணி நேரம் இவர் அலைய நேரிட்டது. இதே போன்றே, அன்றாடம் வாகனத்தை பறிகொடுக்கும் பலரும் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர்.அபராத நடைமுறை என்ன? 'நோ பார்க்கிங்' பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு, அதன் உரிமையாளர் அருகில் இருந்தால், வாகனத்தை போலீசார் அப்புறப்படுத்தி எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதே இடத்தில் நோட்டீஸ் வழங்கி அபராதம் வசூலித்தபின் வாகனத்தை விடுவிக்கலாம். ஒருவேளை, வாகன உரிமையாளர் அந்த இடத்தில் இல்லாவிடில், 'கிரேன்' (மீட்பு வாகனம்) மூலம் போலீசார் அப்புறப்படுத்தி எடுத்துச் செல்லலாம். அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும்போது, மீட்கப்பட்ட வாகனத்தின் பதிவு எண், அந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம் உள்ளிட்ட விபரங்களை 'ஒயர்லெஸ்'சில் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் சென்ற பின், வாகன உரிமையாளர் வந்து தனது வாகனத்தை காணாமல் திடுக்கிட்டு கன்ட்ரோல் ரூம் போலீசாரை போனில் தொடர்பு கொள்ளும்போது அவருக்கு விபரம் அளிக்கப்படும். 'நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த உங்களது வாகனம் போலீசாரால் மீட்கப்பட்டு இந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது; அங்கு சென்று அபராதம் செலுத்தியபின் மீட்டுக்கொள்ளுங்கள்' என தெரிவிப்பர். 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தும்போது மேற்கண்ட நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்பதே துறைசார்ந்த உத்தரவு. எனினும், மாநகர போக்குவரத்து போலீசாரில் பலரும் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.மீட்கப்படும் வாகனங்கள் பற்றிய விபரங்களை கன்ட்ரோல் ரூமுக்கு தெரிவிக்காமலே எடுத்துச் சென்றுவிடுகின்றனர். இதனால், தங்கள் வாகனம் திருட்டுப்போய்விட்டதாக கருதி பலரும் பீதிக்குள்ளாகி அழாத குறையாக அங்குமிங்கும் ஓட நேரிடுகிறது. அருகில் இருக்கும் கடைக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள் மூலமாக தாமதமாக தகவல் அறிந்தபின், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று வாகனத்தை மீட்க அலைமோதுகின்றனர். அபராதம் விதிப்பு நடவடிக்கையில் நிலவும் குறைபாடுகளை களையவும், மக்கள் வீண் அலைச்சலுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாவதை தவிர்க்கவும் போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வாகன மீட்பு நடவடிக்கையில் போலீசாரில் சிலர் பொறுப்பற்ற முறையில் அத்துமீறி செயல்படுவதால் ஒட்டுமொத்த போலீசாருக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதுகுறித்து எங்களுக்கும் புகார்கள் வந்துள்ளன. 'ஸ்பாட் பைன்' விதிக்கும் போலீசார் மற்றும் வாகன மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் போலீசாருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்படும்' என்றார்.