குறிச்சி : கோவை மாநகராட்சியின் 96வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம், தனி நபராக சென்று ஓட்டு சேகரிக்கிறார்.கோவை மாநகராட்சியின் 96வது வார்டு கவுன்சிலருக்கான போட்டியில், சுயேச்சை வேட்பாளராக, லோகநாதபுரம், முதலியார் வீதியில் வசிக்கும் பொன்னுசாமி(எ) ஆறுமுகம் களம் காண்கிறார்.
வைரம் சின்னத்தில் போட்டியிடும் இவர், கடந்த 2007ல், குறிச்சி குளத்திலுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றினார். தொடர்ந்து ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திக்கு முன், ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபடுகிறார். மேலும், ரத்த தானம் உள்பட பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.இவர் தனது ஓட்டு சேகரிப்பின் ஒரு பகுதியாக, தான் செய்த பணிகள் குறித்து வெளியான செய்திகளின் தொகுப்பை, தனது நோட்டீசில் அச்சடித்து வினியோகம் செய்து வருகிறார். நாள்தோறும் காலை 7.00 மணி முதல் தனி நபராக வார்டிலுள்ள அனைவரையும் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். தனி நபராக ஓட்டு சேகரிக்க வரும் இவரை, பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,'' குறிச்சி குளத்திலுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றியதால், இப்பகுதியில் பெரும்பாலானோருக்கு என்னை நன்கு தெரியும். மற்றவர்களைப் போல என்னிடம், கொடுப்பதற்கு பணம் இல்லை; மனமும், மார்க்கமும் உண்டு. பணத்துக்காக வரும் கூட்டத்தை நான் நம்பவில்லை. தனியாளாக சென்றாலும், சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை வெற்றி பெறச் செய்தால், நேர்மையாக, லஞ்சம் வாங்காமல் அனைத்து பணிகளையும் செய்து தருவேன். முக்கியமாக, குடிநீர் வினியோகம் சீராக குரல் கொடுப்பேன்,'' என்றார்.

