/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்பாளையம் போலீசாருக்கு நற்சேவை விருது
/
கோவில்பாளையம் போலீசாருக்கு நற்சேவை விருது
ADDED : ஜன 28, 2025 06:29 AM

அன்னுார் : கோவில்பாளையம், அன்னுார் போலீசார் மற்றும் பேரூராட்சி ஊழியருக்கு, கலெக்டர் நற்சேவை சான்றிதழ் மற்றும் விருது வழங்கினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணிபுரிந்த பல்வேறு துறை அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்கிறது. கோவையில் நடந்த குடியரசு தின விழாவில், அன்னுார் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் பிரதீப் குமாருக்கு, கலெக்டர் விருது மற்றும் நற்சேவைக்கான சான்றிதழ் வழங்கினார்.
அன்னுார், போலீஸ் ஸ்டேஷனில் முதல் நிலை காவலராக பணிபுரியும் கருணாகரன், கோவில் பாளையம் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் ஆகியோருக்கு கலெக்டர் விருது மற்றும் நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். விருது பெற்ற போலீசார் மற்றும் ஊழியருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
சூலுார்
சூலுார் வட்டாரத்தில், 76 வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சூலுார் பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில், விமானப்படை அதிகாரி சமந்தக்ராய், தேசிய கொடியை ஏற்றி வைத்து, என்.சி.சி., மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விமானப்படை அதிகாரி ராகேஷ் குமார் திவாரி, பள்ளி முதல்வர் ராகேஷ் குமார் மிஸ்ரா ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன, குழு நடனம், சிலம்பாட்டம் நடந்தது. தலைமையாசிரியை ராதா வெங்கடேஷன் நன்றி கூறினார்.
ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் சிவக்குமார் தேசிய கொடி ஏற்றி, என்.சி.சி.,மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். என்.சி.சி., அலுவலர் தீபக் ரிஷாந்த் தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
சூலுார் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியம் கொடியேற்றினார். அலுவலர்கள் வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. சூலுார் பஸ் ஸ்டாண்டில், தேசிய கொடி ஏற்றப்பட்டது. போக்குவரத்து கழக அலுவலர்கள், கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

