/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்; உறியடித்து பக்தர்கள் கொண்டாட்டம்
/
கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்; உறியடித்து பக்தர்கள் கொண்டாட்டம்
கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்; உறியடித்து பக்தர்கள் கொண்டாட்டம்
கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்; உறியடித்து பக்தர்கள் கொண்டாட்டம்
ADDED : செப் 16, 2025 10:35 PM

போத்தனூர்; குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையத்திலுள்ள கிருஷ்ணர் கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 14ம் தேதி துவங்கியது.
கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகளுடன் கிருஷ்ண பகவான் வீதியுலா நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை, சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் நடந்த உறியடித்தலில் சிறுவர்கள் உற்சாகமாக பங்கேற்று, உறியடிக்க முயல, கோவில் கமிட்டியினர் மஞ்சள் நீரை அவர்கள் மீது ஊற்றி, நிகழ்ச்சியை கலகலப்பாக்கினர்.
இதன் பின், இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் வழுக்கு மரம் ஏறுதல் துவங்கியது. 30 அடி உயர வழுக்கு மரத்தில், முதலில் சிறுவர்கள் ஏறி, வழுவழுப்பை குறைத்தனர்.
தொடர்ந்து, இளைஞர்கள் தங்கள் திறமையை காட்டினர். அங்கு திரண்டிருந்த மக்கள் இளைஞர்களை உற்சாகப்படுத்தினர்.
இடையர்பாளையம், நந்தவனம் தோட்டத்தை சேர்ந்த கார்த்தி பிரசாத் இலக்கை எட்டி, பரிசு புதையலை வென்றார்.
இவரை, ஊர் பெரியவர்கள் மற்றும் யாதவ இளைஞர் அணியினர் பரிவட்டம் கட்டி, கவுரவித்தனர். நிறைவாக, யாதவ இளைஞரணியின் 38ம் ஆண்டு துவக்கம், பரிசளிப்பு விழா நடந்தது.
சலீவன் வீதியில்... சலீவன் வீதி வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில், ஸ்ரீ ஜெயந்தி உற்சவமான கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி நேற்று நடந்த உறியடி உற்சவத்தில், ஏராளமான குழந்தைகள் உறியடித்து, உற்சாகமாக விழாவை கொண்டாடினர்.
கருவறையில் வீற்றிருக்கும் வேணுகோபால கிருஷ்ணருக்கும், உற்சவருக்கும், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சிறப்பு திருமஞ்சனம், உறியடி உற்சவம் நடந்தது.
மாலையில், உற்சவருக்கும் மூலவருக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சகல திரவிய அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து திவ்ய பிரபந்த சேவை உற்சவம், தீபாராதனை நடந்தது. பின், சுவாமி சன்னதி புறப்பாடு நடந்தது.
ஆவாரம்பாளையத்தில்... ஆவாரம்பாளையம் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில், மாலை 5 மணிக்கு சுவாமிக்கு திருவாராதனம், 5:30க்கு சாற்றுமுறை, 6 மணிக்கு உற்சவர் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீசத்யபாமா சமேத வேணுகோபாலசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோவில் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா வந்தார்; திரளான பக்தர்கள் வழிபட்டனர். 7 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
பெரியகடை வீதியில்... பெரிய கடை வீதியில் உள்ள, லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோயிலில், பாரம்பரிய முறைப்படி கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் கஸ்துாரி ரங்கர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சியளித்தார். திரளான பக்தர்கள் தரிசித்தனர்.