/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமலைராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
திருமலைராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 31, 2025 11:02 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளிபாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருமலைராய பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காளிபாளையம் ஊர் கவுண்டர் தங்கவேலு நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். விழா மங்கல இசையுடன் தொடங்கின. முதலில் கன்னிமார் கருப்பராயர் கோவிலில் இருந்து புண்ணிய நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தீர்த்த குடங்கள் மற்றும் கோபுர கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.
தொடர்ந்து காலை, 7:00 மணி அளவில் இரண்டாம் கால யாக வேள்வியில் ஹோமம், ஸ்ரீ நாராயண மூல மந்திர ஹோமம், 108 மூலிகை திரவியங்கள் கொண்ட பூஜை, வீர அனுமன் ஹோமம், கிருஷ்ண ஆபரண பூஜை உள்ளிட்டவை நடந்தன.
பின்னர் புண்ணிய நதிகளின் தீர்த்தங்கள் அடங்கிய தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்த வரப்பட்டன. கவுண்டம்பாளையம் ஸ்ரீ வாராகி மந்திராலயா பீடாதிபதி வாராகி மணிகண்ட சுவாமிகள் தலைமை வகித்து கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
யாகசாலை வேள்விகளை முரளி சங்கர் சுவாமிகள், செந்தில்குமார், வினோத் மற்றும் வாராகி மந்திராலய குழுவினர் மேற்கொண்டனர். தொடர்ந்து, அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தன.