/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குஞ்சிபாளையம் ரயில்வே கேட்டை மூடக்கூடாது! மனு கொடுத்து மக்கள் வலியுறுத்தல்
/
குஞ்சிபாளையம் ரயில்வே கேட்டை மூடக்கூடாது! மனு கொடுத்து மக்கள் வலியுறுத்தல்
குஞ்சிபாளையம் ரயில்வே கேட்டை மூடக்கூடாது! மனு கொடுத்து மக்கள் வலியுறுத்தல்
குஞ்சிபாளையம் ரயில்வே கேட்டை மூடக்கூடாது! மனு கொடுத்து மக்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 12, 2024 11:32 PM

பொள்ளாச்சி:'பொள்ளாச்சி அருகே, குஞ்சிபாளையம் இணைப்பு பாதை ரயில்வே கேட்டை மூட வேண்டாம்,' என அப்பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார்.
குஞ்சிபாளையம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி, குஞ்சிபாளையம் சரவணக்கவுண்டர் வீதியில் இருந்து ஜமீன்ஊத்துக்குளிக்கு செல்லும் இணைப்பு பாதை, பல ஆண்டு காலமாக உள்ளது. தற்போது, தெற்கு ரயில்வே துறை அந்த இணைப்பு பாதையை அடைப்பதாக தெரிகிறது.
பல காலமாக அந்த இணைப்புச்சாலை, ஜமீன் ஊத்துக்குளி, மீன்கரை ரோடு, பிரதான ரோட்டுக்கு செல்கிறது.
பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள், இதர வேலைக்கு செல்வோர் என, பல்வேறு தரப்பினரும் இப்பாதையை பயன்படுத்துகின்றனர்.
இப்பாதையை ரயில்வே நிர்வாகம் மூடினால், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல இடையூறுகளும், இன்னல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில் பாதிப்புகளும் ஏற்படும்.
பேரூராட்சி நிர்வாகம் வாயிலாக, இந்த சாலை பணிக்கு நபார்டு வங்கி வாயிலாக, நிதி பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அங்கீகாரம் நபார்டு வங்கி வழங்கியதாக தெரிகிறது. நீர்வளத்துறையும், ரோடு போட அனுமதி வழங்கியுள்ளது.
இப்பாதையை மூடினால், பிரதான சாலையான மீன்கரை ரோடுக்கு செல்ல, மூன்று கி.மீ., துாரம் சுற்றி வர வேண்டியிருக்கும். எனவே, ரயில்வே நிர்வாகம், இப்பாதையை மூடி சுவர் எழுப்பாமல் இருக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., மீது புகார்
பொள்ளாச்சி நகர பா.ஜ., சார்பில் வழங்கபட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
சமூகவலைதளங்களில் தமிழக முதல்வர் குறித்து விமர்சித்து பதிவிட்ட, பொள்ளாச்சி பா.ஜ., நிர்வாகியை கைது செய்து சிறையில், 65 நாட்கள் அடைத்தனர்.
இந்நிலையில், தமிழக கவர்னர் ரவி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவை தெற்கு மாவட்ட எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் ஆகியோரை சுவரொட்டி வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பொள்ளாச்சி தி.மு.க., நிர்வாகிகள் அவதுாறு பரப்பி வருகின்றனர்.
சமீபத்தில், ராமபிரானை தவறாக சித்தரித்து பொள்ளாச்சியை சேர்ந்த தி.மு.க., நிர்வாகி செல்வராஜ் சமூகவலைதளத்தில் பதிவு செய்தார்.தி.மு.க., நிர்வாகிகள், மக்களிடம் பிரிவினையை துாண்டும் விதமாகவும், மத மோதல்கள் ஏற்படும் விதமாகவும்; கொலை மிரட்டல் விடுத்தும் கருத்துக்களை பதிவிடுகின்றனர்.
எனவே, அவதுாறு பரப்பி விமர்சனம் செய்யும் பொள்ளாச்சி தி.மு.க., நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.