/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வன பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
/
வன பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
வன பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
வன பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
ADDED : ஜூலை 29, 2025 11:55 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், நேற்று நடந்த ஆடிக் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக் குண்டம் விழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 28ம் தேதி மாலையில் பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட்டது. 11 டன் ஊஞ்ச விறகை குண்டத்தில் அடுக்கி தீ உருவாக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து பொதுப்பணித்துறை சார்பில், அம்மனை அழைத்து வந்தனர்.
காலை, 5:45 மணிக்கு கோவில் தலைமை பூசாரி நவின் குமார் குண்டத்தைச் சுற்றி பூஜை செய்து, பூப்பந்தை உருட்டி விட்டு முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து உதவி பூசாரிகள், பிரமுகர்கள், பக்தர்கள் இறங்கினர். 12 மணி நேரத்திற்கு மேலாக, நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி தீமிதித்து, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மதியம், 12:00 மணிக்கு அனைத்து பக்தர்களும் குண்டம் இறங்கி முடித்தனர். பின்பு, 4 பசுக்களை குண்டத்தில் நடக்க வைத்தனர். பின்னர் குண்டத்தின் மீது பக்தர்கள் உப்பு கொட்டி வேண்டுதலை நிறைவேற்றினர்.
மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான், போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் ஆகியோர் மேற்பார்வையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் பவானி ஆற்றின் அருகேயும், குண்டம் அருகேயும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு காலை முதல் மதியம் வரை அன்னதானம் வழங்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
இன்று மாவிளக்கு மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 31ம் தேதி பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், 4ம் தேதி, 108 குத்துவிளக்கு பூஜையும், 5ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, தக்கார் மேனகா, கோவில் ஆய்வாளர் ஹேமலதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.