/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குனியமுத்தூர் தடுப்பணையை தூர்வாரும் பணி துவக்கம்
/
குனியமுத்தூர் தடுப்பணையை தூர்வாரும் பணி துவக்கம்
குனியமுத்தூர் தடுப்பணையை தூர்வாரும் பணி துவக்கம்
குனியமுத்தூர் தடுப்பணையை தூர்வாரும் பணி துவக்கம்
ADDED : நவ 21, 2025 06:46 AM

தொண்டாமுத்தூர்: சிறுதுளி அமைப்பு சார்பில், குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் புதுக்காட்டு தடுப்பணையை தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது.
கோவையின் ஜீவ நதியாக நொய்யல் ஆறு உள்ளது. இந்த நொய்யல் ஆற்றுக்கு, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து நீர் ஆதாரமாக வரும் ஓடை, நரசீபுரம், புதுக்காட்டு தடுப்பணை வழியாக நொய்யல் ஆற்றில் இணைகிறது.
இந்த புதுக்காட்டு அணைக்கட்டு, பல ஆண்டுகளாக தூர் வாராமல், மண்மேடுகளாக உள்ளது. இதனால், அப்பகுதியில் நீர் சேமிக்க முடிவதில்லை. எனவே, இந்த தடுப்பணையை தூர்வார வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், சிறுதுளி அமைப்பு மற்றும் கரூர் வைசியா வங்கி இணைந்து, குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் புதுக்காட்டு தடுப்பணையை தூர்வார திட்டமிட்டனர். இதனையடுத்து, தடுப்பணைகளை தூர்வாரி புனரமைக்க பூமி பூஜை, குனியமுத்தூர் தடுப்பணையில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து, தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார். இவ்விழாவில், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், கரூர் வைசியா வங்கியின் சமூக பங்களிப்பு நிதியின் தலைமை அலுவலர் நதியா, நீர்வளத்துறை உதவி பொறியாளர் நல்லதம்பி, விவசாய சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் பேசுகையில்,புதுக்காட்டு தடுப்பணை மற்றும் குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் அதன் வழித்தடத்தை தூர்வாரும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 6.5 கோடி லிட்டர் நீர் சேமிப்புத்திறனை உயர்த்த முடியும். அதோடு, 2,093 ஏக்கர் பாசனப்பகுதியில் உள்ள, 697 விவசாயிகள் நேரடியாகவும், 2,500 விவசாயிகள் மறைமுகமாகவும் பயன்பெற உள்ளனர், என்றார்.

