ADDED : ஜன 02, 2025 10:26 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அருகே ஒற்றை காட்டு யானை தாக்கியதில் கூலி தொழிலாளி ஒருவர் பலியானார்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நீலாம்பதி கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
இந்நிலையில், நீலாம்பதியை சேர்ந்த பொன்னுச்சாமி, 51, நேற்று காலை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் விவசாய கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள புதர் பகுதியில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை அவரை ஆக்ரோஷமாக துரத்தி தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் காரமடை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.