/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பு; சந்தை மதிப்பு தொகை வழங்க வேண்டும்'
/
'நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பு; சந்தை மதிப்பு தொகை வழங்க வேண்டும்'
'நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பு; சந்தை மதிப்பு தொகை வழங்க வேண்டும்'
'நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பு; சந்தை மதிப்பு தொகை வழங்க வேண்டும்'
ADDED : செப் 02, 2025 08:50 PM

அன்னுார்; அவிநாசி- மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை மதிப்புக்கு தொகையை நிர்ணயித்து வழங்க வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தினர்.
அவிநாசி- மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலைக்கு தேவையான நிலம் கையகப்படுத்த, கோவை தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) நெடுஞ்சாலைகள் அலுவலகம் சார்பில், ஒட்டர்பாளையம் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் அன்னுார் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) செந்தில் வடிவு தலைமை வகித்தார்.
துணை கலெக்டர் ஜெகநாதன் பேசுகையில், ''கையகப்படுத்தப்படும் நிலம், கட்டிடம், மரங்கள், ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
குருக்கிளையம் பாளையம், ஜீவா நகர், அழகாபுரி நகர், புது நகர் பொதுமக்கள் பேசுகையில்,'கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு எவ்வளவு தொகை தருவீர்கள் என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும்.
தற்போது அரசு வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக உள்ளது. வழிகாட்டி மதிப்பை கணக்கெடுக்காமல் சந்தை மதிப்புக்கு தொகை வழங்க வேண்டும். சில இடங்களில் வெறும் நான்கு அங்குலம் ஆறு அங்குலத்திற்கு மார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. அவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நெடுஞ்சாலை அமைக்கும் போதே கழிவுநீர் வடிகால் அமைக்க வேண்டும். சில இடங்களில் வீடுகளில் மார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. வீடு கையகப்படுத்துவதால் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். அதற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்,' என்றனர்.
உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார் பேசுகையில், ''மிகக் குறைந்த அளவு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியிருந்தால் அவற்றிற்கு விலக்கு தர நடவடிக்கை எடுக்கப்படும். மையக்கோட்டில் இருந்து இருபுறமும் 9.6 மீ. அளவுக்கு நிலம் தேவைப்படுகிறது. இதில் 8.1 மீட்டருக்கு தார் சாலை அமைக்கப்படுகிறது. 1.5 மீ. அகலத்திற்கு மண் பாதை அமைக்கப்படுகிறது,'' என்றார்.
கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில், 'நில உரிமையாளர்கள் பத்திரம், மூல பத்திரம், வில்லங்க சான்று, சிட்டா, ஆதார், பான், வங்கி கணக்கு, ரேஷன் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ 4 ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்,' என்றனர்.