/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனத்தில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு
/
வனத்தில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு
ADDED : மார் 18, 2025 04:01 AM

பொள்ளாச்சி : ஆனைமலை புலிகள் காப்பகம், 1,479 ச.கி.மீ., பரப்பில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி, உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய எட்டு வனச்சரகங்களை உள்ளடக்கியுள்ளது.
இந்த வனப்பகுதியில், அதிகப்படியான யானை, காட்டெருமை், மான், புலி உள்ளிட்ட வனவிலங்குகளும், பல்வேறு வகையான பறவையினங்களும் காணப்படுகின்றன. வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பதை கண்டறியும் வகையில், ஆண்டுதோறும், இரு முறை, கோடை மற்றும் குளிர் கால கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
வனவிலங்குகளின் எண்ணிக்கை குறைந்தால் அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். அவ்வகையில், இரு தினங்கள், பறவைகள் கணக்கெடுப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டன.
வனத்துறையினர் கூறியதாவது:
ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி, தமிழக வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட வனச்சரகங்களில், பறவை ஆர்வலர்கள், வன ஆர்வலர்கள், வனவர்கள், வனக்காவலர்களை கொண்ட, தனிக் குழுவினர் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில், மலபார் கிளி, மஞ்சள் பிடரி சின்ன மரங்கொத்தி, சின்ன மின்சிட்டு, கருந்தலை மாங்குயில், பட்டாணிக் குருவி, பொறிமார்பு சிலம்பன், துடுப்பு வால் கருச்சான், வெண் வயிற்று கருச்சான், வெண் கன்னக் குக்குருவான், அரசவால் ஈப்பிடிப்பான், என, 50-க்கும் மேற்பட்ட நிலவாழ் பறவை இனங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கென பிரத்யேகமாக உள்ள மொபைல்ஆப் வாயிலாக விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.