/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை ஒப்படைக்கவில்லை!
/
விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை ஒப்படைக்கவில்லை!
விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை ஒப்படைக்கவில்லை!
விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை ஒப்படைக்கவில்லை!
ADDED : ஜன 22, 2024 05:32 AM

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம், இன்னும் மத்திய அரசின் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்று தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
கோவை சர்வதேச விமான நிலையம், ஆண்டுக்கு 23 லட்சம் பயணிகளைக் கையாண்டு வருகிறது. இதில் 10 சதவீதம் பேர், இங்கிருந்து வேறு நகரங்களுக்குச் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகள். கோவையிலிருந்து இரண்டே இரண்டு வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுவதால், பெயரளவிலேயே இது சர்வதேச விமான நிலையமாகவுள்ளது.
விமான நிலைய விரிவாக்கம் செய்யாததே, இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 2010ல், விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், இந்த பணி மிகவும் மெதுவாக நடந்து வந்தது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்பு, நிதி ஒதுக்கப்பட்டு, பணி வேகப்படுத்தப்பட்டது.
செயல்முறை ஆணை
விரிவாக்கம் செய்வதற்கு, மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்குச் சொந்தமான 135 ஏக்கர் நிலம் உட்பட மொத்தம் 627.89 ஏக்கர் நிலம் தேவை என்று, தமிழக அரசிடம் விமான நிலைய ஆணையம் கோரியிருந்தது.
தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின்படி, இந்த நிலத்தையும், மாநில அரசே எடுத்துத் தர வேண்டுமென்பதால், அதையும் சேர்த்தே நிலம் கேட்கப்பட்டிருந்தது.
நிலமெடுப்புப் பணி முடிந்து, பாதுகாப்புத்துறை நிலம் மற்றும் 558 ஏக்கர் பட்டா நிலத்திலும், விரிவாக்கப்பணியைத் துவக்குவதற்கு அனுமதி வழங்கி, கோவை கலெக்டர் சார்பில், கடந்த செப்., 11ல் செயல்முறை ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த ஆணையில் இருந்த நிபந்தனையின்படி, இந்த நிலத்தை விமான நிலைய ஆணையம், இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கோவையைச் சேர்ந்த ஷ்யாம் என்பவர், விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தியது தொடர்பான சில விபரங்களை, தமிழக அரசின் வருவாய்த்துறை நிலமெடுப்பு தாசில்தாரிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக வாங்கியுள்ளார். அதில், மொத்தம் 652 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தித் தருமாறு, விமான நிலைய ஆணையம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 ஏக்கர் நிலம்
கையகப்படுத்த வேண்டிய 469 ஏக்கர் பட்டா நிலத்தில், கடந்த டிச.,31 வரையிலும், 435 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது; இன்னும் 34 ஏக்கர் நிலம், எடுக்க வேண்டியுள்ளது என்று பதில் தரப்பட்டுள்ளது. ஆனால் இப்போது வரையிலும், இந்த நிலம் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்படவில்லை என்ற உண்மையையும் தமிழக அரசின் வருவாய்த்துறை ஒப்புக் கொண்டுள்ளது.
ஓடுதளம் விரிவாக்கத்துக்காகத்தான், நிலம் கையகப்படுத்தித் தரப்பட்டுள்ளது; கோவை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப் பணிகளை மேற்கொள்வதற்கு மட்டும், விமான நிலைய ஆணையத்துக்கு அனுமதி (enter upon permission) வழங்கப்பட்டு இருப்பதாகவும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கேள்விக்கு, 'விமான நிலைய விரிவாக்கத்திற்கான விமான நிலைய ஆணையத்திற்கு நிலத்தை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை அரசு வகுக்கும் வரை, அந்த நிலங்களை வேறு எந்த கம்பெனிக்கோ, ஏஜன்சிக்கோ மாற்றக்கூடாது; குத்தகைக்கு அல்லது உள் குத்தகைக்கும் விடக்கூடாது' என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனை
இந்த நிலத்தை இன்று வரை ஆணையம் எடுக்காமலிருப்பதற்கு, தமிழக அரசின் நிபந்தனையே காரணமென்பது இதிலிருந்து தெளிவாகியுள்ளது.
பாதுகாப்புத்துறை நிலத்துக்கு மாற்று நிலம் கொடுப்பது, நிபந்தனையின்றி மொத்த நிலத்தையும் ஒப்படைப்பது போன்ற எதிர்பார்ப்புகளால், இந்த நிலத்தை விமான நிலைய ஆணையம் எடுக்க வாய்ப்பில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான இந்த மோதல் போக்கால், கோவை விமான நிலைய ஆணைய விரிவாக்கம், இன்னும் எத்தனை ஆண்டுகள் தள்ளிப்போகுமோ, அதனால் மேற்கு மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி எந்தெந்த விதத்தில் தடைபடுமோ என்பதுதான், கொங்கு மண்டலத்திலுள்ள தொழில் முனைவோரின் பெரும் கவலையாகவுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-