/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண் கடத்தல் அமோகம்! குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்
/
மண் கடத்தல் அமோகம்! குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்
மண் கடத்தல் அமோகம்! குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்
மண் கடத்தல் அமோகம்! குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி புகார்
ADDED : ஏப் 24, 2025 06:11 AM

பெ.நா.பாளையம்: சின்னவேடம்பட்டி ஏரியிலிருந்து சட்டவிரோதமாக மண் கடத்தல் நடக்கிறது. இதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என, குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.
கோவை வடக்கு புறநகர் பகுதியில் பெய்யும் மழை நீர் வெள்ளமென பெருகி, சங்கனூர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும். வெள்ளம் காரணமாக குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து, பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், நன்மை ஏற்படுத்த மழை நீரை தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சின்னவேடம்பட்டி ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரியை உருவாக்க விவசாயிகள் பலரும் தங்கள் நிலங்களை ஏரி அமைப்பதற்காக கொடுத்தனர். பின்னர், 200 ஏக்கர் பரப்பில் ஏரி கட்டமைக்கப்பட்டது.
இதுவரை இந்த ஏரிக்கு இரண்டு முறை மட்டுமே மழை நீர் வந்துள்ளது. கடந்த, 1992ம் ஆண்டு மழை நீர் வந்தது. தொடர்ந்து ஏரிக்கு வரும் கால்வாயில் தூர்வாரப்படாததாலும், அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருந்ததாலும், மழை நீர் சின்னவேடம்பட்டி ஏரியை அடைய முடியவில்லை.
இதையடுத்து தன்னார்வ தொண்டு அமைப்பினர், மாநகராட்சி நிர்வாகம், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய நல அமைப்புகளின் உதவியோடு, ஏரிக்கு வரும் ராஜ வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரப்பட்டது. இதையடுத்து, 2023ம் ஆண்டு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் சின்னவேடம்பட்டி ஏரிக்கு அதிகப்படியான தண்ணீர் வந்தது. சரவணம்பட்டி, மணியகாரம்பாளையம், கணபதி, அத்திப்பாளையம், பீளமேடு, காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் சின்னவேடம்பட்டி ஏரியை தூர் வாரும் பணிக்காக வண்டல் மண் எடுத்துச் செல்ல, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
ஆனால், சட்டத்துக்கு புறம்பாக, தற்போது, சின்னவேடம்பட்டி ஏரியிலிருந்து மண் கடத்தல் நடப்பதாக விவசாயிகள் புகார் எழுப்பி உள்ளனர்.
கவுண்டம்பாளையத்தில் உள்ள வடக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., கோவிந்தன் தலைமையில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், சின்னவேடம்பட்டி ஏரியிலிருந்து மண் கடத்தல் நடப்பதாக விவசாயி காளிசாமி புகார் மனு அளித்தார்.
இது குறித்து, ஆர்.டி.ஓ., கோவிந்தன், நீர்வளத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' சின்னவேடம்பட்டி ஏரியில் கடந்த, 23 நாட்களுக்கு முன்பு வரை கலெக்டர் அனுமதி உடன் கிராவல் மண் எடுக்கப்பட்டதாகவும், காலை, 9:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை மண் எடுக்க அனுமதிக்கப்பட்டதாகவும், கிராவல் மண் எடுக்கும் சமயம் நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டதாகவும், கிராவல் மண் எடுக்கும் உரிமம், 23 நாட்களுக்கு முன்பு முடிந்துவிட்ட நிலையில், மண்அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட அனைத்து வண்டிகளும் குளத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. கடந்த, 23 நாட்களாக கிராவல் மண் எதுவும் எடுக்கப்படவில்லை' என்றனர்.
இதையடுத்து சின்னவேடம்பட்டி ஏரியிலிருந்து மண் அள்ளுவது, கடத்துவது தெரிந்தால், உடனடியாக தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு ஆர்.டி.ஓ., கோவிந்தன், வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் திரளாக பங்கேற்று தங்களுடைய குறைகளை மனுக்களாக அளித்தனர்.

