ADDED : ஆக 10, 2024 12:49 PM

அன்னூர்: கோவை மாவட்டத்தில், 62 குளம், குட்டைகளில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் உற்பத்தி செய்பவர்கள், இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம் என கோவை கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு வருவாய் துறையில் விண்ணப்பித்து விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு குறிப்பிட்ட அளவு மண் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் அன்னூர் ஒன்றியம், காரேக்கவுண்டன்பாளையம் ஊராட்சி, கெம்பநாயக்கன்பாளையத்தில் 85 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் விடிய விடிய மண் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. அரசு அதிகாரிகள் முன்னிலையில் தான் மண் எடுக்க வேண்டும். ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டும் எடுக்க வேண்டும் உள்ளிட்ட விதிகளை புறந்தள்ளி மண் எடுக்கின்றனர். இதனால் குளத்தில் நீரோட்டம் பாதிக்கிறது. குளத்தில் பல ஆண்டுகளாக வளர்த்து வந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுகின்றன என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.