ADDED : செப் 10, 2025 10:37 PM
கோவை; கோவையில் நில அளவைத்துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. 'டிரோன் சர்வே' மற்றும் புவியியல் தகவல் அடிப்படையிலான டி.ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக, நில அளவை மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்ட நிலஅளவைத்துறை வசம், 5 டி.ஜி.பி.எஸ்., கருவிகள் உள்ளன. தற்போது வருவாய்த்துறை வாயிலாக, 14 டி.ஜி.பி.எஸ்., கருவிகள் தருவிக்கப்பட்டுள்ளன. ஒரு கருவி விலை 15,00,000 ரூபாய். மொத்தம், ரூ.2.10 கோடி மதிப்பிலான இக்கருவிகள், மாவட்ட நில அளவைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 19, 20, 29, 30, 31,47, 48வது வார்டுகளில், நகரின் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டமான (நக்சா) செயல்படுத்தப்படுகிறது.
'டிரோன்' பயன்படுத்தி, நில அளவை மேற்கொண்டு, புவி அமைவிட விவரங்களுடன் கூடிய புல வரைபடங்களை உருவாக்கி, அவற்றை உள்ளாட்சி அமைப்புகள் கையாள ஏதுவாக அமையும். மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், '5 டி லிடார்' சென்சார் டிரோன் கேமரா மூலமாக, ஆய்வு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இவ்வகை கேமரா வாயிலாக ஆய்வு நடத்த ராணுவம், விமானம், கப்பல் படையிடம் அனுமதி பெற வேண்டும். அதற்கான பணிகள் வேகமாக நடக்கின்றன.
புதிய கருவிகள் வாயிலாக, சர்வே பணிகள் துல்லியமாக மேற்கொள்ளப்படும் என, நில அளவைத்துறையினர் தெரிவித்தனர்.