/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நில உடைமை பதிவுகள் சரி பார்க்கும் முகாம்
/
நில உடைமை பதிவுகள் சரி பார்க்கும் முகாம்
ADDED : பிப் 15, 2025 07:10 AM

மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் நடந்த, விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாமில், ஏராளமான விவசாயிகள் பங்கேற்று, தங்களுடைய நிலத்தின் பதிவுகளை சரிபார்த்தனர்.
மேட்டுப்பாளையம், காரமடை வட்டார வேளாண் துறை சார்பில், சிறுமுகை பேரூராட்சி அலுவலக வளாகத்தில், விவசாயிகளின் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம் நடந்தது.
இந்த முகாமுக்கு காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி தலைமை வகித்து பேசியதாவது: தமிழக அரசு விவசாயிகளுக்கு என, தனித்துவமான அடையாள எண் கூடிய அட்டை வழங்க அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் நில உடமை பதிவுகளை சரி பார்க்கும் முகாம், ஒவ்வொரு ஊராட்சி அலுவலக வளாகத்தில், நடைபெற்று வருகிறது.
இந்த முகாமில் விவசாயிகள், தங்களின் நில பதிவுகள் சரியாக உள்ளதா அல்லது தவறாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம். முகாமுக்கு வரும் போது ஆதார் அட்டை, நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
இந்த திட்டத்தால் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும், முறையாக விவசாயிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யலாம். மத்திய அரசு வேளாண் அமைச்சகத்தின், வழிகாட்டு நெறிமுறையின் படி, தமிழக முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கம்ப்யூட்டர் முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் அட்டை போன்று, விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் அட்டை வழங்கப்படும். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு உதவி இயக்குனர் பேசினார். முகாமில் மத்திய வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் துரைசாமி, தேசிய உணவு பாதுகாப்பு கழக திட்ட ஆலோசகர் மாரியப்பன், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் தினேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
சூலூர்:
விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணி, சூலூர், சுல்தான் பேட்டையில் தீவிரமாக நடக்கிறது.
மத்திய அரசு உத்தரவுப்படி, தமிழகத்தில் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணி துவங்கியுள்ளது.
சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரத்தில் இப்பணி தீவிரமடைந்துள்ளது. இரு ஒன்றியங்களிலும் வருவாய் கிராமம் வாரியாக முகாம் நடக்கிறது. வேளாண், தோட்டக்கலைத்துறையினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், சமுதாய கூடம் உள்ளிட்ட பணி நடக்கும் இடங்களுக்கு விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து, ஆவணங்களை சமர்ப்பித்து அடையாள எண்ணை பெற்று செல்கின்றனர்.

