/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விரிவாக்கத்துக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு கருத்து கேட்பு கூட்டத்தில் நில உரிமையாளர்கள் கோரிக்கை
/
சாலை விரிவாக்கத்துக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு கருத்து கேட்பு கூட்டத்தில் நில உரிமையாளர்கள் கோரிக்கை
சாலை விரிவாக்கத்துக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு கருத்து கேட்பு கூட்டத்தில் நில உரிமையாளர்கள் கோரிக்கை
சாலை விரிவாக்கத்துக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு கருத்து கேட்பு கூட்டத்தில் நில உரிமையாளர்கள் கோரிக்கை
ADDED : அக் 23, 2025 11:47 PM

அன்னூர்: 'கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு அரசு வழிகாட்டி மதிப்பில் இழப்பீடு வழங்கக் கூடாது. சந்தை மதிப்பில் வழங்க வேண்டும்,' என, கருத்து கேட்பு கூட்டத்தில் நில உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அவிநாசியில் துவங்கி, அன்னூர் வழியாக, மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., தூரத்திற்கு, நான்கு வழி சாலை அமைக்க, தமிழக அரசு 238 கோடி ரூபாய் ஒதுக்கியது. கடந்த பிப்ரவரியில் பணி துவங்கியது.
இதில் சாலையின் மையப்பகுதியில் இருந்து இருபுறமும் தலா 30 அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. அரசுக்கு சொந்தமான நிலம் இல்லாத பகுதியில் கையகப்படுத்தப்பட உள்ளது. பொகலூர் ஊராட்சியில் 111 பேரிடம் 183 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அன்னூர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பொகலூர் ஊராட்சியை சேர்ந்த நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) செந்தில் வடிவு தலைமை வகித்தார்.
துணை கலெக்டர் ஜெகநாதன் பேசுகையில், கையகப்படுத்தும் நிலத்திற்கு அரசு வழிகாட்டி மதிப்பில், குறைந்தது 2.25 மடங்கு முதல் அதிகபட்சம் 2.75 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும். கட்டிடங்களுக்கு நெடுஞ்சாலைத் துறை மதிப்பீட்டுத் தொகையை விட ஒரு மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்கப்படும். அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லாவிட்டால் ஆட்சேபனையுடன் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். பின்னர் கோர்ட்டில் உங்கள் குறையை தெரிவிக்கலாம், என்றார்.
பொகலூர் மக்கள் பேசியதாவது : மாநில நெடுஞ்சாலையில் அரசின் வழிகாட்டி மதிப்பு மிகக் குறைவாக உள்ளது. அந்த மதிப்பில் 2 1/4 மடங்கு இழப்பீடு கொடுத்தால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும்.
எனவே சந்தை மதிப்புக்கு இழப்பீடு தர வேண்டும். வீடு, கடை ஆகியவற்றின் ஒரு பகுதியை இடிப்பதால் ஒட்டுமொத்த கட்டிடமும், வீடும் பாதிக்கப்படும். எனவே இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தர வேண்டும். மார்க்கிங் செய்ததில் குளறுபடி உள்ளது. சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் முன்னிலையில் நில அளவை செய்து எல்லை கல் நட வேண்டும். நோட்டீஸில் குறிப்பிடப்பட்டதை விட அதிக நிலத்திற்கு மார்க்கிங் செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சாலையில் தெற்கு பகுதியை விட வடக்கு பகுதியில் அதிகமாக நிலம் கையகப்படுத்துகின்றனர்.
இவ்வாறு சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் பதிலளிக்கையில், புகார் தெரிவித்தவர்களின் பகுதிக்கு மீண்டும் அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்வார்கள், என்றார்.
நில எடுப்பு தாசில்தார்கள் வெங்கடாசலம், ஸ்ரீதேவி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தகுமார், உதவி பொறியாளர் சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

