/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மை பணியாளர்களுக்காக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
துாய்மை பணியாளர்களுக்காக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 14, 2025 10:40 PM
கோவை; பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் போராட்டம் நடத்திய துாய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவையில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர், கோவை மாவட்ட நீதிமன்றம் வளாக நுழைவாயில் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சங்க கோவை மாவட்ட செயலாளர் ஜோதிகுமார் தலைமை வகித்து பேசுகையில், ''பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், 13 நாட்களாக அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த துாய்மை பணியாளர்களை, உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, தமிழக போலீசார் பலவந்தமாக கைது செய்துள்ளனர். இந்த மனித உரிமை மீறலை, அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது,'' என்றார்.
மாநில குழு உறுப்பினர் கோபால்சங்கர், மாவட்ட நிர்வாகிகள் கரீம், ஜெயக்குமார், இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட நிர்வாகி சக்திவேல் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.