ADDED : பிப் 28, 2026 06:01 AM
கோவை: நடைபெற உள்ள பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்கிரைப் (சொல்வதை எழுதும் பணிக்கு) பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும் என்று, பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசுக்கு அக்கழகம் சார்பில் விடுத்துள்ள கோரிக்கை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, ஸ்கிரைப் பணிக்கு பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்தக்கூடாது. எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த, பள்ளி வேலை நாள் மற்றும் கூடுதல் நேரத்தை பயன்படுத்தி, மாணவர்களை மேம்படுத்தும் முயற்சிகளை பட்டதாரி ஆசிரியர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இதற்கு இடையூறாக, பிளஸ் 2 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 'ஸ்க்ரைப்' பணிக்கு பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.
