/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயணியர் நிழற்கூரையில் பதுங்கிய சிறுத்தை
/
பயணியர் நிழற்கூரையில் பதுங்கிய சிறுத்தை
ADDED : நவ 07, 2025 09:37 PM

வால்பாறை: பொள்ளாச்சி ரோட்டில் சிறுத்தை நடமாடுவதால், சுற்றுலா பயணியர் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்க வேண்டும், என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் சமீப காலமாக யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் பகல் நேரத்திலேயே உலா வருகின்றன. சில நேரங்களில், மனித - வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் வாட்டர்பால் வேவர்லி பயணியர் நிழற்கூரையில், இரவு நேரத்தில் சிறுத்தை பதுங்கியதை அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இரவு நேரத்தில் நிழற்கூரையில் சிறுத்தை பதுங்கிய சம்பவம் அப்பகுதி தொழிலாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில், இரவு நேரத்தில் வனவிலங்குகள் வெளியில் வருவது இயற்கையான ஒன்று தான். எஸ்டேட் பகுதி மக்கள் இரவு நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
பயணியர் நிழற்கூரையில் யாரும் இல்லாததால் சிறுத்தை அந்தப்பகுதியில் பதுங்கியுள்ளது. அதே போல், பொள்ளாச்சி ரோட்டில் செல்லும் வாகனங்களும் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். சிறுத்தையை படம் பிடிப்பது, வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஆபத்தானது,' என்றனர்.

