/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
50 ஆயிரம் மின் இணைப்புக்கு காத்திருப்பு! அரசு மீது விவசாயிகள் அதிருப்தி
/
50 ஆயிரம் மின் இணைப்புக்கு காத்திருப்பு! அரசு மீது விவசாயிகள் அதிருப்தி
50 ஆயிரம் மின் இணைப்புக்கு காத்திருப்பு! அரசு மீது விவசாயிகள் அதிருப்தி
50 ஆயிரம் மின் இணைப்புக்கு காத்திருப்பு! அரசு மீது விவசாயிகள் அதிருப்தி
ADDED : நவ 07, 2025 09:36 PM

கோவை: நீண்ட காலம் இலவச மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகளில், 50 ஆயிரம் பேருக்கு, நடப்பாண்டில் இணைப்பு வழங்கப்படும் என, அரசு அறிவித்து பல மாதங்கள் கடந்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி, விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
சாதாரண பிரிவு, சுய நிதி பிரிவு என்ற இரு பிரிவுகளில், விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பு அரசால் வழங்கப்படுகிறது. சாதாரண பிரிவில் மின்வழித்தட செலவு, மின் வினியோகம் அனைத்தும் இலவசம்.
சுயநிதி பிரிவில் மின்சாரம் இலவசம். வழித்தட செலவில் ஒரு பகுதியை விவசாயிகள் ஏற்க வேண்டும். சுயநிதி பிரிவில், தட்கல் எனப்படும் விரைவு முறையில் விண்ணப்பிக்கும் விவசாயிகள், வழித்தட முழு செலவினத்தையும் ஏற்க வேண்டும்.
மாநிலம் முழுவதும், 2 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். கோவையில், 2007, 2009ம் ஆண்டுகளில் சாதாரண பிரிவில் விண்ணப்பித்த விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
தட்கல் முறையில் முழு பணம் செலுத்திய விவசாயிகளும் காத்திருக்கின்றனர். 50 ஆயிரம் பேருக்கு நடப்பாண்டில் மின் இணைப்பு வழங்கப்படும் என, கடந்த ஏப்ரலில் முதல்வர் அறிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி.
அவர் கூறியதாவது:
மின் இணைப்புக்கு முழுமையாக பணம் செலுத்தியும், மின் இணைப்பு கிடைக்காமல் ஆண்டுக்கணக்கில் பலர் காத்திருக்கின்றனர். 2007-2008 முதல் சாதாரண வரிசையில் பதிவு செய்த விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
அதே போன்று, 2013ல் சுய நிதி பிரிவில் பதிவு செய்தவர்களும் காத்திருக்கின்றனர். 2024-25 ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு, சீனியாரிட்டி முறையில் இணைப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். விவசாய குறைத்தீர் கூட்டத்தில் கேட்டாலும் சரியான பதில் இல்லை.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை மண்டல மின்வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'விவசாயிகளுக்கான மின் இணைப்பு சார்ந்த பிரச்னையில், இங்கு முடிவு எடுக்க இயலாது. இது மாநில அளவிலான பிரச்னை' என்றார்.
சரி, முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளவர்களின் பார்வைக்கு, பிரச்னையை கொண்டு செல்லலாமே!

