/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலையில் சிறுத்தை நடமாட்டம்
/
மருதமலையில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : பிப் 16, 2024 01:51 AM

வடவள்ளி:மருதமலை மலைப்பாதையில், சிறுத்தை நடமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கோவை வனச்சரகத்திற்குட்பட்ட, மருதமலை வனப்பகுதியில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்ல படிக்கட்டு பாதை மற்றும் மலைப்பாதை என, இரு வழிகள் உள்ளன.
மலைமேல் உள்ள கோவிலுக்கு, அதிகாலை, 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்தாண்டு, மலைமேல் உள்ள கோவில் மற்றும் மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி படுத்தப்பட்டது. இதையடுத்து, மக்களின் பாதுகாப்பு கருதி, காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை படிக்கட்டு பாதையிலும், மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்களும் செல்ல வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதியளித்துள்ளனர். காலை, 6:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை, கார் மற்றும் கோவில் பஸ் மூலம் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, மலைப் பாதையின் கடைசி வளைவில், சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. அவ்வழியாக சென்ற பக்தர்கள் அதை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'மருதமலை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இரவு நேரங்களில் இடம் பெயர்ந்து வருகிறது. இந்நிலையில், அவ்வப்போது மக்களின் கண்களுக்கும் தென்படுகிறது. தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்,'என்றனர்.