/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களிடம் வரவேற்பை பெற்ற...முந்தைய கமிஷனரின் திட்டங்கள் தொடரட்டும்
/
மக்களிடம் வரவேற்பை பெற்ற...முந்தைய கமிஷனரின் திட்டங்கள் தொடரட்டும்
மக்களிடம் வரவேற்பை பெற்ற...முந்தைய கமிஷனரின் திட்டங்கள் தொடரட்டும்
மக்களிடம் வரவேற்பை பெற்ற...முந்தைய கமிஷனரின் திட்டங்கள் தொடரட்டும்
ADDED : ஜன 12, 2025 02:06 AM

கோவை: கோவை மாநகர முந்தைய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொண்டு வந்த திட்டங்கள் அத்தனையும், மக்களின் வரவேற்பை பெற்றவை. தொடர வேண்டும் அவை, என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன் பொறுப்பில் இருந்தார். இவர் சென்னைக்கு மாற்றப்பட்டு, கடந்த 1ம் தேதி புதிய கமிஷனராக சரவண சுந்தர் பொறுப்பேற்றார்.
பாலகிருஷ்ணன் கமிஷனராக இருந்த போது, பொது மக்களின் பாதுகாப்புக்காக 'போலீஸ் அக்கா', 'போலீஸ் புரோ' போன்ற பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.போலீஸ் அக்கா திட்டம், தமிழக அளவில் பல்வேறு மாவட்டங்களில் பின்பற்றப்படுகிறது.
வீடுகளில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கு, உதவி செய்ய அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களின், போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்கள் முதியவர்களை கண்காணித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.
போலீசாரின் உடல், மன நலத்திற்காக போலீஸ் இசைக்கச்சேரி, உடற்பயிற்சி, மராத்தான் என பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். போலீஸ் துறையில் பெண்களுக்கு சம உரிமை,அதிவிரைவு, படைக்கலன் பணிமனை, கனரக வாகனங்கள் டிரைவர், மோப்ப நாய் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில், பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பல போலீசார் மராத்தான் போட்டிகளில் பங்கேற்றனர், விளையாட்டுகளில் ஈடுபட்டனர். பல்வேறு திட்டங்களுக்கு மக்கள் மற்றும் போலீசார் மத்தியில், நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் சரவண சுந்தர், அனைத்து திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்துவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, அவரிடம் கேட்டபோது, ''முன்னாள் கமிஷனர் இருந்த போது செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும், தொடர்ந்து செயல்படுத்தப்படும். அந்த திட்டங்களை முறைப்படுத்தி, வலுப்படுத்தி செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர மக்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு, போக்குவரத்தில் பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.