/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து பாதுகாப்புடன் கொண்டாடுவோம்!
/
தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து பாதுகாப்புடன் கொண்டாடுவோம்!
தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து பாதுகாப்புடன் கொண்டாடுவோம்!
தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து பாதுகாப்புடன் கொண்டாடுவோம்!
ADDED : அக் 19, 2025 10:58 PM

கோவை: தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கும் போது, சிறிது கவனக்குறை ஏற்பட்டால் கூட, பெரிய விபத்துகள் ஏற்படும் அபாயம் உண்டு. எனவே, அனைவரும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்கிறது, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை.
கோவை மாவட்ட தீத்தடுப்பு குழுவை சேர்ந்த ஜெயக்குமார் கூறியதாவது:
* பட்டாசுகள், மத்தாப்பு, புஸ்வாணம் ஆகியவற்றை வெடிக்கும் போது, தண்ணீர் அல்லது மணல் வாளி அருகில் வைத்திருக்க வேண்டும்.
* கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற பட்டாசு வெடித்த பிறகு தண்ணீரில் நனைத்தோ அல்லது மணலில் மூடிவைத்தோ பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.
* பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பான தூரம் விட்டு நின்று, முகத்தை பக்கவாட்டாக திருப்பிக் கொள்ள வேண்டும்.
* வீட்டு அருகிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ பட்டாசு வெடிக்கும் முன், ஜன்னல் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
* தரமான பட்டாசு மட்டுமே வாங்கி வெடிக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மேற்பார்வையில் மட்டுமே வெடிக்க வேண்டும்.
* திறந்த வெளி மைதானத்தில் பட்டாசு வெடிப்பது பாதுகாப்பானது. குடிசைப் பகுதியில் ராக்கெட் வகை பட்டாசு பயன்படுத்தக் கூடாது.
* பட்டாசு வெடிக்கும் சமயங்களில், பருத்தி ஆடைகள் மற்றும் காலணிகள் அணிவது நல்லது. தீக்காயம் ஏற்பட்டால், உடனே குளிர்ந்த நீரை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில், எரிச்சல் அடங்கும் வரை தொடர்ந்து ஊற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'முதியோர் இல்லங்களின்
அருகில் வெடிக்காதீர்'
''பெரியோரின் மேற்பார்வையின்றி குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்கக் கூடாது. வெடிக்காத பட்டாசுகளை, மீண்டும் வெடிக்க வைக்க முயற்சிக்கக் கூடாது. மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, அல்லது சிம்னி விளக்குகள் அருகில், பட்டாசுப் பொருட்களை வைக்கக் கூடாது. குடிசைகள் நிறைந்த பகுதிகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், முதியோர் இல்லங்கள் ஆகிய இடங்களின் அருகில், ராக்கெட் மற்றும் பெரிய பட்டாசுகள் வெடிக்கக் கூடாது,'' என்றார் ஜெயக்குமார்.