/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட மைய நுாலகத்தில் கொஞ்சம் நனையாம சாப்பிட விடுங்களேன்!
/
மாவட்ட மைய நுாலகத்தில் கொஞ்சம் நனையாம சாப்பிட விடுங்களேன்!
மாவட்ட மைய நுாலகத்தில் கொஞ்சம் நனையாம சாப்பிட விடுங்களேன்!
மாவட்ட மைய நுாலகத்தில் கொஞ்சம் நனையாம சாப்பிட விடுங்களேன்!
ADDED : ஜூன் 04, 2025 08:14 AM

கோவை; மாவட்ட மைய நுாலக வாசகர்கள், மதிய உணவு சாப்பிட கட்டப்பட்டுள்ள புதிய அறையை திறக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோட்டில், கோவை மாவட்ட மைய நுாலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும், 500 க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு படிப்பவர்கள். காலை முதல் மாலை வரை இங்கு படிப்பவர்கள், மதிய உணவு கொண்டு வந்து சாப்பிட்டு வருகின்றனர். சாப்பிட தனி அறை இல்லாததால், நுாலக வளாக தரையிலும், மரத்தடியிலும் அமர்ந்து சாப்பிடுகின்றனர்.
இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கோவை மாவட்ட மைய நுாலக நிர்வாகம், 25 பேர் அமர்ந்து சாப்பிட வசதியாக, தனி அறை கட்டியுள்ளது. கட்டி முடித்து ஒரு மாதமாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
வாசகர்கள் கூறுகையில், 'இதுவரை நுாலக வளாகத்தில் உள்ள காலி இடத்திலும், மரத்தடியிலும் அமர்ந்து சாப்பிட்டு வந்தோம். மழைக்காலம் துவங்கி விட்டதால், நுாலக வளாகத்தில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. அதனால் உடனடியாக புதிய உணவு சாப்பிடும் அறையை திறந்து விட வேண்டும்' என்றனர்.
கோவை நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரன் (பொறுப்பு)கூறுகையில், ''சாப்பிடும் அறை கட்டும் பணி முடிவடைந்துள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு இருப்பதால், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பார்வையிட்டு, ஆய்வு செய்த பிறகு திறக்க வேண்டும். இந்த வாரத்தில் திறந்து விடுவோம்,'' என்றார்.
ரொம்ப 'பிசியாக' இருக்கும் கண்காணிப்பு பொறியாளர், ஒரு அஞ்சு நிமிஷம் போய் பார்த்துட்டு வந்தா, எல்லாரும் நனையாம சாப்பிட்டுக்குவாங்க!