/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாசிப்பை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம் !
/
வாசிப்பை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம் !
ADDED : ஏப் 26, 2025 11:10 PM
'மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிகச்சிறந்தது புத்தகம்தான்' என்கிறார், இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
'வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை' என்றார் ஹென்றி வார்ட் பீச்சர் என்ற அறிஞர். உலக புத்தக தினம், கடந்த 23ம் தேதி கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக, கோவை நுாலக வாசகர் வட்டம் தலைவர் லெனின்பாரதியிடம் பேசினோம்.
அப்போது அவர் கூறியதாவது:
புத்தகம் வெறும் எழுத்துக்களைக் கொண்டதல்ல. வெற்றுத் தாள்களின் தொகுப்புமல்ல. ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளனின் எண்ணம், சிந்தனையாகும். இதை மனதில் கொண்டுதான், வால்ட் விட்மன், ''புத்தகத்தை கையில் எடுக்கும் போது, ஒரு மனிதனின் இதயத்தை கையில் எடுக்கிறீர்கள்'' என்று சொல்கிறார்.
இந்த நேரத்தில், தமிழகத்தின் நுாலக தந்தை ராமாமிர்தம் ரங்கநாதனை நினைத்துப் பார்ப்பது அவசியம். இவர்தான் 1928ல் சென்னையில் நுாலக சங்கத்தை ஏற்படுத்தினார்.
1931, அக்., 21ம் நாள் மன்னார்குடியில் நடமாடும் நுாலக வண்டிப் பயணத்தை ஆரம்பித்து, 72 கிராமங்களில், 275 பயணங்கள் நடத்தப்பட்டன. இதில் 3,782 புத்தகங்கள், 20 ஆயிரம் முறைக்கு மேல் மக்களுக்கு கொடுத்து வாசிக்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டன.
அவர் புத்தக வாசிப்பை, மக்களிடம் கொண்டு செல்ல பெரும் முயற்சியை மேற்கொண்டார். அவர் விட்டுச் சென்ற பயணத்தை, புத்தக விற்பனை வாயிலாக, புத்தக வாசிப்பை மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

