ADDED : செப் 18, 2026 02:31 PM
வால்பாறை: நெடுஞ்சாலைத்துறை ரோட்டை விரிவுபடுத்த அதிகாரிகள் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளாலும், விதிமுறையை மீறி ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், ‘வால்பாறை நகரம் மிகவும் குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. ரோடு முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதால், வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இந்நிலையில், ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புக்களை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்,’ என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரதீப் கூறியதாவது:
வால்பாறை டவுன் பகுதி ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளதால் ரோடு குறுகலாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுள்ளோம்.
வருவாய்த்துறை, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை இணைந்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியதும், ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும்.
இவ்வாறு, கூறினார்.
