/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிலையான வேளாண்மைக்கு மண் வளம் காப்போம்! இன்று உலக மண் தினம்
/
நிலையான வேளாண்மைக்கு மண் வளம் காப்போம்! இன்று உலக மண் தினம்
நிலையான வேளாண்மைக்கு மண் வளம் காப்போம்! இன்று உலக மண் தினம்
நிலையான வேளாண்மைக்கு மண் வளம் காப்போம்! இன்று உலக மண் தினம்
ADDED : டிச 04, 2024 10:04 PM

பொள்ளாச்சி; உலக மண் தினத்தில், 'நிலையான வேளாண்மைக்கு மண் வளம் பாதுகாக்க உறுதியேற்போம்,' என, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் தெரிவித்தார்.
மண் வளப்பாதுகாப்பையும், மண் ஆதாரங்களையும் முறையாக பேணி பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, 2014ம் ஆண்டு முதல் டிச.,5ம் தேதி சர்வேதச மண் தினம் கொண்டாடப்படுகிறது.தாய்லாந்து நாட்டு முன்னாள் அதிபர் பூமிபால் தஜேவின் பிறந்த நாளான டிச.,5ம் தேதி சர்வதேச மண் தினமாக போற்றப்படுகிறது.
நடப்பாண்டு சர்வதேச மண் தினம், 'மண்ணை பேணுதல் - அளவிடுதல், கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல்' என்ற மையக் கருத்துடன் கொண்டாடப்படுகிறது.
மண்ணுக்கு உயிருக்கு!
இதுகுறித்து, ஆழியாறு நகர் தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரிய சுதாலட்சுமி கூறியதாவது:
நிலையான வேளாண்மைக்கு முதன்மை ஆதாரமாக உள்ள மண்ணை,பரிசோதனை வாயிலாக அதில் உள்ள ஊட்டசத்துக்களையும், இடர்பாடுகளையும் கண்டறிய இயலும். இதன் தரம் என்பது பவுதீக, ரசாயன, உயிரியியல் பண்புகளை உள்ளடக்கியது. தொடர்ச்சியாக கண்காணித்து தரத்தை மேம்படுத்துவது நிலையான வேளாண்மைக்கு வழிவகுக்கும்.
மண் உயிரோட்டமுள்ளது; பல கோடி நுண்ணுயிர்களும், பேரினங்களும் உள்ளது. மனித உடலின் ஜீரண மண்டலத்துக்கு நிகராக, நாம் இடும் உரங்கள் அனைத்தையும் உயிர்சத்தாய் உருமாற்றி பயிருக்கு அளித்து, கழிவுகளை அடுத்த தலைமுறைக்கு மறு சுழற்சி செய்யும் பெரும் பணியை மண் அன்றாடம் மேற்கொள்கிறது.
கரியமில வாயுவை வெளியேற்றி பிராணவாயுவை வேருக்கும் அளிக்கும் மண், இயற்கை நமக்கு அளித்த ஆக்ஸிஜன் சிலிண்டராகும்.பெருகி வரும் மக்கள் தொகைக்கு உணவளிக்க பயிர் விளைவிக்கும் மண், உயிர் ஜனனிக்கும் கருவறைக்கு நிகரானது.
பரிசோதனை தேவை
ஒரு சதுர அடி வளமான மண்ணில், 100 பூச்சியினங்கள் மற்றும், 30 மண் புழுக்கள் இருக்கும். வளிமண்டல தழைச்சத்தை நிலை நிறுத்தியும், பயிருக்கு கிடைக்காத நிலையில் உள்ள ஊட்டச்சத்துக்களை கரைத்து பயிருக்கு அளித்தும், வறட்சியை தாங்கும் திறனை அளித்து மண் உதவுகிறது.
மண் பரிசோதனை அடிப்படையில் மட்டுமே ஊட்டச்சத்துக்களை இட வேண்டும். இதனால், ஊட்டச்சத்து பற்றாக்குறையால் வாடுவதும், ஊட்டச்சத்து மிகுதியால் பயிர் நீரிழிவு நோயாளியாவதும் தடுக்கப்படுகிறது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்திலும் மண் ஆய்வு மற்றும் ஆலோசனை மையம் உள்ளது.இச்சேவையை உழவர்கள் பயன்படுத்தி மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடலாம்.
பரிசா... தரிசா...!
மண் வாழ் உயிரினங்கள் வாழ அங்ககச் சத்து தேவைப்படுகிறது. மண்ணின் அங்ககச்சத்து அதிகரிக்க, பசுந்தாள் உரங்கள், இயற்கை எருக்களான தொழு உரம், மண்புழு உரம், ஆட்டு எரு மண்ணில் இடலாம்.தட்டைப்பயறு, உளுந்து, பாசிப்பயறு ஆகியவை பயிர் சுழற்சியில் சேர்க்க வேண்டும். மண்ணுக்கு இணக்கமான உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, வேர் உட்பூசணம் ஆகியவை மண்ணில் இட்டு பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கலாம்.
வீரியமிகு ரசாயன கலைக்கொல்லிகள், பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்த்து, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை முறையை பின்பற்றலாம்.
மண் என்ற பெயரில் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்வது உயிரோட்டமிகு பரிசா அல்லது தரிசு நிலமா என்பது இன்று நாம் மண் வளத்தை எப்படி பாதுகாக்கிறோம் என்பதிலேயே உள்ளது. மனித இனம் நலமுடன் வாழ மண்ணை ஆராதிப்போம்.
இவ்வாறு, அவர் கூறினார்.