சுவருக்கு பதிலாக 'கோம்போ வளை பின்னல் ' இயற்கையை காக்கலாம்!கட்டுமான துறையில் தென்னை நார் பொருள்
சுவருக்கு பதிலாக 'கோம்போ வளை பின்னல் ' இயற்கையை காக்கலாம்!கட்டுமான துறையில் தென்னை நார் பொருள்
UPDATED : ஆக 30, 2026 05:02 PM
ADDED : ஆக 30, 2026 04:31 PM

பொள்ளாச்சி: வீடு அல்லது நிறுவனங்களில் கான்கிரீட்டால் கட்டப்படும் சுற்றுச்சுவருக்கு பதிலாக, காயர் கோம்போ வளை பின்னல் என்ற தென்னை நாரை பயன்படுத்துவதால், இயற்கை வளத்தை பாதுகாக்கலாம், என, சர்வதேச தென்னை நார் சங்கம் தலைவர் தெரிவித்தார். இந்தியாவில், 14 மாநிலங்களில், 60 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதில், 5,000க்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
அதில், தென்னை நார் காகிதம், ஜன்னல்களில் பயன்படுத்தப்படும் தென்னை நார் விரிப்புகள், தென்னை நார்பலகை, தென்னை நார் தட்டு போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
அதில், நிறுவனங்கள், பள்ளி, வீட்டு வளாகங்களில், சுற்றுச்சுவருக்கு பதிலாக காயர் கோம்போ வளை பின்னல் பயன்படுத்தும் நடைமுறையை பின்பற்றினால், இயற்கை வளம் பாதுகாக்கலாம் என, சர்வதேச தென்னை நார் சங்கத்தினர் தெரிவித்தனர்.
சர்வதேச தென்னை நார் சங்கத்தலைவர் கவுதமன் கூறியதாவது:
நேபாளத்தில் ஏற்படுத்திய காட்டாற்று வெள்ளம், மனித குலத்துக்கு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவ நிலை மாற்றம் மிக கடுமையாக உலகம் முழுவதும் தன் கோரத்தாண்டவத்தை காட்டிக்கொண்டுள்ளது.
இதற்கு முக்கிய பல காரணங்கள் இருந்தாலும், பருவ நிலை மாற்றம் என்பது முக்கிய காரணமாக உள்ளது.
அதற்கு பிளாஸ்டிக் பயன்பாடு ஒரு காரணமாக உள்ளது. பிளாஸ்டிக்கு மாற்றாக உள்ள தென்னை நாரை பயன்படுத்துவதால் இயற்கையை பாதுகாக்கலாம்.
சர்வதேச தென்னை நார் சங்கம், வீடு, நிறுவனம் கட்டும் போது, 20 - 30 சதவீதம் இயற்கை சார்ந்த பொருட்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டது.
அதில், 'காயர் கோம்போ வளைபின்னல்'களை உபயோகப்படுத்தி ஏர் கன்டிஷன் இல்லாமல், 2 - 10 முதல் டிகிரி வெப்பநிலையை குறைக்கும். இதற்காக, இந்தியாவில் சர்வதேச தென்னை நார் சங்கம் வாயிலாக வளைபின்னல் உருவாக்கப்பட்டது.
இதை சுற்றுச்சுவருக்கு பதிலாக பயன்படுத்தலாம். வீடுகளில், வரவேற்பு அறை, படுக்கை அறை போன்றவற்றில் காயர் கோம்போ வளைபின்னலை உபயோகப்படுத்துவதன் வாயிலாக, 2 - 8 டிகிரி வெப்பநிலையை குறைக்க முடியும். 'ஏசி' இல்லாமல் வெப்பநிலையை குறைக்க முடியும்.
காற்றில் உள்ள மாசு, 20 - 90 சதவீதம் குறையும். புறஊதா கதிர்களை வடிக்கட்டும் தன்மை தென்னைநாருக்கு உள்ளது.
காயர் கோம்போ வளை பின்னல், 90 சதவீதம் தென்னை நாரால் மட்டுமே உருவாக்கப்படுகிறது. ஆறு அடி முதல், 24 அடி வரை உருவாக்கலாம். ஒரு சதுர அடிக்கு, ஒவ்வொரு வகைகளை பொறுத்து, 400 ரூபாய் முதல், 2,300 ரூபாய் வரை ஏற்படும். இது, இயற்கை சார்ந்த பொருட்கள், கட்டுமானத்துறையிலும் புகுத்தும் முயற்சியாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
