நாய்த் தொல்லைக்கு காண்போம்: விடை தீர்வுடன் கிளம்பியது கலாமணி 'படை'
நாய்த் தொல்லைக்கு காண்போம்: விடை தீர்வுடன் கிளம்பியது கலாமணி 'படை'
ADDED : ஏப் 05, 2026 05:33 PM

கவுண்டம்பாளையம்: கவுண்டம்பாளையம் தொகுதி வாக்காளர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான முகம்தான் கலாமணி. நாம் தமிழர் கட்சி சார்பில், கடந்த லோக்சபா தேர்தலிலேயே களமிறங்கி 6 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.
இம்முறையும் வழக்கம்போல முன்கூட்டியே நா.த.க. வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால், பிரசாரத்தில் பாதிக் கிணறை தாண்டி விட்டார். அந்தந்த ஏரியாவுக்கான பிரச்னைகளுக்கான தீர்வையே வாக்குறுதிகளாக கொடுத்து வருகிறார் கலாமணி.
''நல்ல குடிநீரை இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதைத் தனியாருக்கு ஏன் தாரை வார்க்கணும். சூயஸ் நிறுவனத்துக்கு குடிநீர் வினியோகத்தைக் கொடுத்தது தவறு. நாளை போர் போடுவதில் இருந்து, குளத்து நீரைப் பயன்படுத்துவது வரை கார்ப்பரேட் நிறுவனம் சொல்வதைத்தான் கேட்கணும்.
நாங்கள் ஜெயித்தால் சூயஸ் நிறுவனத்துக்கு தடை போட்டு, 24 மணி நேர குடிநீரை அரசே வழங்கும். தெருநாய் தொல்லை தீர்க்க அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தி, அவற்றுக்கு உணவு கொடுத்தால், அவை ஆக்ரோஷமாக மாறாது.
தெருநாய்களுக்கு காப்பகங்களை உருவாக்கி, அவை பெருகுவதைத் தடை செய்வோம். தெருநாய் பிரச்னைக்கு விடை தருவோம்,'' என்கிறார் கலாமணி.
மேலும் அவர் “சிட்டிங் எம்.எல்.ஏ.,அருண்குமார் தொகுதிப் பக்கமே வரவில்லை. எல்லா அடிப்படை பிரச்னைகளும் தீர்க்கக் கூடியவைதான். இந்தவாட்டி நிச்சயம் ஜெயிப்போம்” என நம்பிக்கையாக கூறுகிறார்.
