/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மா மரங்களில் பூக்களை காணோம்! இலையும் கருகுவதால் கவலை
/
மா மரங்களில் பூக்களை காணோம்! இலையும் கருகுவதால் கவலை
மா மரங்களில் பூக்களை காணோம்! இலையும் கருகுவதால் கவலை
மா மரங்களில் பூக்களை காணோம்! இலையும் கருகுவதால் கவலை
ADDED : ஜன 25, 2024 12:01 AM

உடுமலை : உடுமலை அருகே மாமரங்களில், இலைகள் கருகி, பூக்களும் உதிர்ந்து வருவதால், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டு, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை அருகே ஜல்லிபட்டி மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கொங்குரார்குட்டை, வெள்ளைப்பாறை, கரட்டுப்பெருமாள் கோவில், ஆண்டியூர், மானுப்பட்டி உட்பட பகுதிகளில், பல ஆயிரக்கணக்கான ஏக்கரில், மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மானாவாரி மற்றும் இறவை பாசன முறையில், மரங்கள் பராமரிக்கப்படுகிறது. செந்துாரம், பங்கனப்பள்ளி, மல்கோவா உட்பட 17 ரக மா மரங்கள் இப்பகுதியில், வளர்க்கப்படுகின்றன. ஆண்டுக்கு இரு சீசன்களில், மா மரங்கள் பூ விட்டு காய் பிடிக்கும். ஏக்கருக்கு, 5 டன் வரை மாங்காய்கள் அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
வழக்கமாக ஜன., மாதத்தில், மாமரங்களில், பூ விட்டு, பிஞ்சுகள் பிடிக்கத்துவங்கும். ஏப்., மே மாதங்களில், அறுவடை சீசன் துவங்கும்.
இந்தாண்டு, வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யாததால், மரங்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது; தாமதமாக பெய்த மழை காரணமாக, பூக்களும் உதிர்ந்து விட்டது.
விவசாயிகள் கூறியதாவது: பல்வேறு காரணங்களால், முக்கிய சீசனில், மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழைக்குப்பிறகு, மரங்களில், பூ உதிர்தல், இலைகள் பச்சையம் இழந்து கருகுவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டன.
மானாவாரியாக பராமரிக்கப்படும் மாமரங்களில், இத்தாக்குதல் அதிகளவு உள்ளது. முக்கிய சீசனில் மகசூல் குறைந்தால், நஷ்டம் ஏற்படும்.
நோய்த்தடுப்பு மேலாண்மை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பல்வேறு நோய்த்தாக்குதலால் கருகிய மரங்களுக்கு, மறுநடவு செய்ய அரசு உதவ வேண்டும்.
இப்பகுதிக்கேற்ற மா ரகங்களை பரிந்துரைத்து, கன்றுகளை வழங்குவதுடன், நிவாரணம் வழங்கி உதவ வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.