/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரட்டும் பார்த்துக்கலாம்! வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 6,000 ஊழியர்கள்; களப்பணியாற்ற காத்திருப்பு
/
வரட்டும் பார்த்துக்கலாம்! வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 6,000 ஊழியர்கள்; களப்பணியாற்ற காத்திருப்பு
வரட்டும் பார்த்துக்கலாம்! வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 6,000 ஊழியர்கள்; களப்பணியாற்ற காத்திருப்பு
வரட்டும் பார்த்துக்கலாம்! வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 6,000 ஊழியர்கள்; களப்பணியாற்ற காத்திருப்பு
ADDED : அக் 07, 2024 01:05 AM

கோவை : வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, மண்டல அளவில் குழுக்கள் அமைத்து, கோவை மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் இருக்கிறது. 6,000 ஊழியர்கள் களப்பணியாற்ற உள்ளனர். 100 மோட்டார் பம்புகள் மற்றும் மர அறுவை மெஷின்கள் இருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன.
வடகிழக்கு பருவ மழை வரும், 15ல் துவங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. கடந்தாண்டு பருவ மழை பெய்தபோது, நகர பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேம்பாலங்களுக்கு கீழ் தண்ணீர் தேங்கியது.
செல்வ சிந்தாமணி குளத்தின் உபரி நீர் வெளியேறி, குடியிருப்புகளுக்குள் புகுந்தது. அதனால், மாநகராட்சி நிர்வாகம் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆரம்பித்திருக்கிறது.
எங்கெங்கு மழை நீர் தேங்கும் என அடையாளம் கண்டு, உறிஞ்சி வெளியேற்ற மோட்டார் பம்ப்கள், லாரிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. மண்டலத்துக்கு, 20 வீதம், 100 மோட்டார் பம்ப்கள் இருப்பில் உள்ளன.
மரங்கள் சாய்ந்து விழுந்தால், கிளைகளை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த, மண்டலத்துக்கு ஐந்து வீதம் மரம் அறுவை மிஷின்கள், இயக்குவதற்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாட்டு மையம்
ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில், கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 24 மணி நேரமும் ஊழியர்கள் பணிபுரிவர்.
நீர் வழங்கு வாய்க்கால்கள் துார்வாரப்பட்டுள்ளன; மழை நீர் வடிகால் 85 சதவீதம் துார்வாரப்பட்டிருக்கிறது. குளங்களில் இருந்து உபரி நீர் செல்லும் பாதையும் சீரமைக்கப்பட்டுள்ளது.
அவசர எண்கள் அறிவிப்பு
செல்வசிந்தாமணி குளத்துக்கு வரும் மழை நீரை கண்காணித்து, நீர் மட்டம் உயராத அளவுக்கும், ரோட்டுக்கு வராத அளவுக்கும், கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்தால், 0422 - 2302323, 2390261, 2390262, வாட்ஸ்அப் எண்: 81900 00200, பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டால், 14420 என்ற எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.