/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடிதம் எழுதும் போட்டி; மாணவர்களுக்கு அழைப்பு
/
கடிதம் எழுதும் போட்டி; மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : பிப் 14, 2025 12:13 AM
கோவை; தபால் துறை சார்பில் நடத்தப்படும் சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில், மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.
யுனிவர்சல் போஸ்டல் யூனியன் (UPU), ஒவ்வொரு ஆண்டும் 9 வயது முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவியருக்காக, கடிதம் எழுதும் போட்டியை நடத்தி வருகிறது. 2025ம் ஆண்டுக்கான கரும்பொருளாக 'உங்களை கடலாக கற்பனை செய்து கொள்ளுங்கள்; உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்?' என்று மற்றொருவருக்கு விளக்கும் வகையில் கடிதம் எழுத வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் உட்பட அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எந்த மொழியிலும் எழுதலாம். கடிதம், 800 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சிறந்த மூன்று கடிதங்கள், தமிழகத்தில் தேர்வு செய்யப்படும். சிறந்த கடிதங்கள் தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பப்படும்.
மாநில அளவில் சிறந்த மூன்று படைப்புகளுக்கு, முதல் பரிசு 25 ஆயிரம், இரண்டாம் பரிசு 10 ஆயிரம், மூன்றாம் பரிசு 5,000 வழங்கப்படும். தேசியளவில் சிறந்த மூன்று படைப்புகளுக்கு முறையே, 50 ஆயிரம், 25 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் பரிசு வழங்கப்படும். தேசியளவில் முதல் பரிசை வெல்லும் கடிதம் சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்பப்படும். அதில், முதல் பரிசாக தங்கப்பதக்கம், இரண்டாவது பரிசாக வெள்ளிப்பதக்கம், மூன்றாவது பரிசாக வெண்கலப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்போர், பிறப்பு சான்றிதழ் அல்லது ஆதார் ஆகியவற்றின் ஏதாவது ஒரு நகல் இணைக்க வேண்டும்.
கோவை கோட்டத்துக்கு உட்பட்ட மாணவ, மாணவியர், கடிதங்களை வரும் 21ம் தேதிக்குள், 'முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர், கோவை கோட்டம், கோவை - 641001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாணவ, மாணவியர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, முதுநிலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.