/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய பஸ்களின் ஆயுள் நீட்டிப்பு பயணம்... கவனம்! மேலும் ஒன்பது மாதம் ஓடுமாம்!
/
பழைய பஸ்களின் ஆயுள் நீட்டிப்பு பயணம்... கவனம்! மேலும் ஒன்பது மாதம் ஓடுமாம்!
பழைய பஸ்களின் ஆயுள் நீட்டிப்பு பயணம்... கவனம்! மேலும் ஒன்பது மாதம் ஓடுமாம்!
பழைய பஸ்களின் ஆயுள் நீட்டிப்பு பயணம்... கவனம்! மேலும் ஒன்பது மாதம் ஓடுமாம்!
UPDATED : மார் 18, 2024 01:38 AM
ADDED : மார் 18, 2024 12:49 AM

கோவை;தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகத்துக்கு சொந்தமான, பதினைந்து ஆண்டுகளை கடந்த டவுன்பஸ்களை, மேலும் ஒன்பது மாதங்கள் வரை இயக்குவதற்கு, சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் எப்.சி., பெற்ற பின் சாலையில் இயக்கப்படுகின்றன என்றாலும், பயணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்துக்கு சொந்தமாக, கோவையில் 602 சாதாரண டவுன் பஸ்கள் உள்ளன. இந்த டவுன் பஸ்களில் 180 சிகப்பு நிற பஸ்கள்.
சாதாரண டவுன் பஸ்களில், 15 ஆண்டுகளை கடந்து, 30க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் பல பஸ்களின் நிலை, திருப்திகரமாக இல்லை.
15 ஆண்டுகளை கடந்த பஸ்களை, பொதுப்பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது.
ஆனால், போதுமான பஸ்கள் இல்லாததாலும், புதிய பஸ்கள் வருவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகும் என்பதாலும், தற்போதிருக்கும் சாதாரண டவுன் பஸ்களை வரும், 9 மாதங்களுக்கு பயன்படுத்த சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று, அரசு போக்குவரத்துக்கழகம், போக்குவரத்துத்துறை கமிஷனரிடம் அனுமதி கோரியிருந்தது.
அதனடிப்படையில், தமிழக அரசு போக்குவரத்துத்துறை, 15 ஆண்டுகளை கடந்த சாதாரண அரசு டவுன்பஸ்களை, அடுத்து வரும் 9 மாதங்களுக்கு தொடர்ந்து இயக்க அனுமதியளித்துள்ளது.
இதையடுத்து, கோவையிலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களை கொண்டு ஆய்வுக்குட்படுத்தி, 'பிட்னஸ் சர்ட்டிபிகேட்' (எப்.சி.,) சான்று பெற்று, அதன்பின் இயக்கத்துவங்கியுள்ளது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம்.
இது குறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டல பொதுமேலாளர் ஸ்ரீதரன் கூறுகையில், ''15 ஆண்டுகளை கடந்த அரசு டவுன்பஸ்களை, மேலும் ஒன்பது மாதங்களுக்கு இயக்க, தமிழக அரசு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
அதனால் தொடர்ந்து, அதே பஸ்களை இயக்குவோம். அதற்குள் புதிய பஸ்கள் வந்து விடும். அவற்றின் வருகைக்கேற்ப, பழைய பஸ்களை கழித்துக்கொண்டே இருப்போம்,'' என்றார்.
பழுதான பஸ்கள் என தெரிந்தும், அவற்றை இயக்க அனுமதி அளித்துள்ள அரசு போக்குவரத்துத்துறை, பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க தயாரா?

