இணைப்பு பாலம் சீரமைப்பு: வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
இணைப்பு பாலம் சீரமைப்பு: வாகன ஓட்டுநர்கள் நிம்மதி
ADDED : ஏப் 11, 2026 04:37 AM

வால்பாறை: நீண்ட கால போராட்டத்துக்குப்பின், இணைப்பு பாலம் சீரமைக்கும் பணி துவங்கியதால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நல்லகாத்து பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தான் சின்கோனா, முடீஸ் வழியாக செல்லும் வாகனங்கள் செல்கின்றன. நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த பாலத்தில் ஓரத்தில் விரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.
இணைப்பு ரோட்டை சீரமைக்க கோரி, வால்பாறை மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வந்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழிலும் பல முறை செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், வால்பாறை நகராட்சி சார்பில் இணைப்பு பாலம் கான்கிரீட் ரோடாக மாற்றும் பணி நடக்கிறது.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது,'புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக அதிகளவில் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்வதால் ரோடு சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து, நகராட்சி சார்பில் 18.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி தற்போது நடக்கிறது. ஒரு வாரத்திற்குள் இந்த பணி முழுமையடைந்து விடும்,' என்றனர்.
