/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு, ஆடை வாங்க வலை விரிக்கும் 'லிங்க்'
/
பட்டாசு, ஆடை வாங்க வலை விரிக்கும் 'லிங்க்'
ADDED : அக் 19, 2025 09:23 PM
கோவை: பட்டாசு, ஆடைகள் வாங்க வலியுறுத்தி வரும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், விழிப்புடன் இருக்க, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பண மோசடியில் மும்பை முதலிடத்தில் இருந்தது. தற்போது, பெங்களூரு, சென்னை, கோவை ஆகிய நகரங்கள், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மாதந்தோறும், ரூ.1500 கோடி வரை ஆன்லைன் மோசடியில், பணம் இழக்கப்படுவதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
அக்., மாதம் தேசிய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பிட்ட சமூக வலைதளத்தில் இருந்து வரும் தகவல்களை அப்படியே நம்பி, அதில் கொடுக்கப்படும் 'லிங்க்' க்யூ.ஆர்., கோடு ஆகியவற்றை பயன்படுத்தி, மோசடியில் சிக்குகின்றனர்.
பொதுமக்கள் நம்பகத்தன்மை இல்லாத, எந்த சமூக வலைதள தகவலையும் நம்பக்கூடாது. அப்படியே வந்தாலும், அதை தீர ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
தற்போது ஆன்லைனில் பட்டாசு, ஆடைகள், இனிப்புகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக, பல்வேறு தகவல்கள் வருகின்றன. அவற்றை நம்பி ஏமாற வேண்டாம். அதனுள் சென்றால், பணத்தை இழக்க நேரிடும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.