/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டல் சிக்கன் குழம்பில் பல்லி! விற்பனைக்கு தடை விதித்தது உணவு பாதுகாப்புத்துறை
/
ஓட்டல் சிக்கன் குழம்பில் பல்லி! விற்பனைக்கு தடை விதித்தது உணவு பாதுகாப்புத்துறை
ஓட்டல் சிக்கன் குழம்பில் பல்லி! விற்பனைக்கு தடை விதித்தது உணவு பாதுகாப்புத்துறை
ஓட்டல் சிக்கன் குழம்பில் பல்லி! விற்பனைக்கு தடை விதித்தது உணவு பாதுகாப்புத்துறை
ADDED : மே 27, 2025 10:27 PM

கோவை : கோவை புரூக்பாண்ட் சாலையில் அமைந்துள்ள, 'கோவை பிரியாணி' கடை சிக்கன் குழம்பில், பல்லி இருந்ததாக பெறப்பட்ட புகாரை தொடர்ந்து, விற்பனைக்கு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
குமாரபாளையம் பகுதியில் இருந்து, கோவைக்கு ஷாப்பிங் செய்வதற்காக நேற்று மதியம், 2:00 மணியளவில், கலையரசு என்பவர் குடும்பத்துடன் வந்திருந்தார். ஷாப்பிங் முடித்து விட்டு, புரூக் பாண்ட் சாலையில் உள்ள, 'கோவை பிரியாணி' ஓட்டலில் சாப்பிட நுழைந்தனர்.
ஆவலுடன் பிரியாணி ஆர்டர் செய்தனர். சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சிக்கன் குழம்பில் பல்லி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையறிந்து சாப்பிட வந்த அனைவரும் கடை ஊழியர்கள், உரிமையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாப்பிட்ட ஒரு சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அருகில் உள்ள மருத்துவமனையில், முதலுதவி செய்து கொண்டனர்.
கலையரசு கூறுகையில், ''குழம்பில் பல்லி இருப்பதை பார்த்து பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. நானும், என்னுடன் வந்தவர்களும் அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றோம். நல்ல வேளை குழந்தைகள் யாரும் எங்களுடன் வரவில்லை. இதுபோன்ற கடைகள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி அனுராதா கூறுகையில், ''தகவல் வந்தவுடன் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர், ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டார். புகார் உண்மை என்பதால், விற்பனைக்கு தடை விதித்துள்ளோம். உரிய விதிமுறைகளின் படி, பாதுகாப்பு, பராமரிப்பு செயல்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்து, அனுமதி அளித்த பின்னரே விற்பனை துவக்க இயலும்,'' என்றார்.