புரோட்டா குருமாவில் பல்லி; இழப்பீடு வழங்க உத்தரவு
புரோட்டா குருமாவில் பல்லி; இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஜூன் 09, 2026 06:16 AM
கோவை: போத்தனுார் மைல்கல்லை சேர்ந்தவர் பத்ருதீன்; ஆட்டோ டிரைவர். பீளமேடு சிவில் ஏரோ டிரோமிலுள்ள புட்கோர்ட்டில், 2025 ஜூன் 26ல் ரூ.200க்கு புரோட்டா, குருமா பார்சல் வாங்கினார்.
சாப்பிடும் போது, குருமாவில் இறந்த நிலையில் பல்லி இருந்தது. பல்லி கிடந்த குருமாவை மொபைல் போனில் பதிவு செய்தார். ஓட்டலுக்கு சென்று கேட்ட போது ஊழியர்கள் அதற்கான விளக்கம் தரவில்லை.
பத்ருதீனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ரூ.2,500 செலவானது. மருத்துவ செலவு தொகையை வழங்குவதாக ஓட்டல் நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். அதன்பின் போனில் தொடர்பு கொண்ட போது பதில் அளிக்கவில்லை. மருத்துவ செலவையும் தரவில்லை.
இழப்பீடு கோரி கோவை கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பத்ருதீன் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், ''எதிர்மனுதாரரால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக மனுதாரருக்கு, 30,000 ரூபாய் வழங்க வேண்டும். வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
