ADDED : ஜூன் 09, 2026 06:17 AM

கோவை: அவிநாசி ரோட்டில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை(கோவை கிளை) அரங்கில், 'ஏற்றுமதி வசதி மேம்பாட்டில் சுங்கத்துறையின் பங்கு மற்றும் 'அதிதி 2.0' என்ற தலைப்பில் தொழில் துறையினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோவை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை துணை கமிஷனர் தனஞ்ஜெய் பேசியதாவது:
'அதிதி 2.0' மொபைல் செயலி, சர்வதேச பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் மற்றும் அந்நிய செலாவணி இருப்பு குறித்த விவரங்களை 'டிஜிட்டல்' முறையில் சுங்கத்துறைக்கு தெரிவிக்க உதவுகிறது.
அதாவது பயணத்துக்கு 72 மணி நேரத்திற்கு முன் இதுகுறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கலாம். இதன் வாயிலாக சுங்கத்துறையின் பரிசோதனை நேரம் குறைந்து பயணிகள் விரைவில் வெளியே செல்ல முடியும்.
விமான நிலையங்களில் நம் நாட்டின் சுங்கத்துறை விதிகள் சில சமயங்களில் சர்வதேச நாடுகளின் சட்ட திட்டங்களுடனும் தொடர்புடையதாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இங்கு நிரந்தரமாக தங்க வருபவர்களுக்கு உடைமைகள் கொண்டு வரும் அளவீட்டில் சலுகைகள் உண்டு. 'அதிதி 2.0' செயலியை எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்; கையாளுவதும் எளிது.
இவ்வாறு, அவர் பேசினார்.
வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்த், செயலாளர் பிரதீப் உட்பட பலர் பங்கேற்றனர்.
