/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உள்ளாட்சிகள் தினம்; கிராம சபை கூட்டம்
/
உள்ளாட்சிகள் தினம்; கிராம சபை கூட்டம்
ADDED : நவ 02, 2025 10:03 PM
- நிருபர் குழு -: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கடந்த 1ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், 2,323 ஆண்கள், 2,885 பெண்கள் என, மொத்தம் 5,208 நபர்கள் பங்கேற்றனர். மேலும், 540 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வடசித்தூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் சார்பில் மின்தடை மற்றும் மொபைல்போன் டவர் சார்ந்த புகார் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், 'மின்வாரியம் சார்பில் மாதம் தோறும் ஒரு நாள் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. இந்த நாள் பெரும்பாலும் திங்கட்கிழமையாக இருப்பதால், வார சந்தையில் கடை வைப்பவர்கள், மருத்துவமனைக்கு வருபவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், மின்தடை நாட்களில் வடசித்தூர் பகுதியில் உள்ள மொபைல்போன் டவர்கள் செயலிழப்பதால், தொலைத்தொடர்பு பாதிக்கிறது.
எனவே, இந்த டவர்களுக்கு அந்தந்த நிறுவனம் சார்பில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தியும், மின்தடையை வேறு நாளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் சி.மலையாண்டிபட்டினம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தங்கவேல் என்பவர், 'இடப்பிரச்னை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், வீட்டுக்கு எப்படி குடிநீர் இணைப்பு வழங்கலாம்,' என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றவரை அருகில் இருந்தவர்கள் தடுத்து, பெட்ரோல் கேனை பறித்தனர். கோமங்கலம் போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்ற போது, மறைத்து வைத்திருந்த எலி மருந்தை தங்கவேல் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
* உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களிலுள்ள, 72 ஊராட்சிகளில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதில், ஊராட்சி நிர்வாகம், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

