ADDED : மார் 25, 2026 08:28 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் நிலவும் பிரச்னைகளை முன்வைத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட, அ.தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல், கடந்த 2021ம் ஆண்டு நடந்த நிலையில், 2022ம் ஆண்டு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடந்தது. தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்ததால், பெரும்பாலான இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது.
ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், மக்களின் பல அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவை வடக்கு புறநகர் பகுதியில் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் குப்பை பிரச்னை தீர்க்க முடியாமல் உள்ளது. சேகரிக்கப்படும் குப்பையை எங்கு சென்று கொட்டுவது என தெரியாமல், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் விழி பிதுங்குகின்றன. இதே போல, சாக்கடை துார்வாருதல், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை பிரச்னைகள், உடனுக்குடன் தீர்க்கப்படாமல் உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகளில், மக்களின் அடிப்படை பிரச்னைகள் எங்கு தீர்க்கப்படாமல் உள்ளது என்பதை கண்டறிந்து, அதை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்து, ஓட்டு சேகரிக்க, அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.
