UPDATED : அக் 30, 2026 05:29 PM
ADDED : அக் 30, 2026 05:24 PM
அன்னுார்: மானாவாரி பகுதிகளில் மூடாக்கு இடும்படி வேளாண்துறை அறிவுறுத்தி உள்ளது.
அன்னுார் வட்டார வேளாண்துறை அறிக்கை:
அன்னுார் வட்டாரத்தில், நடப்பு மாதத்தில், 186 மி.மீ., மழை பெய்துள்ளது. நடப்பாண்டில் இயல்பான வடகிழக்கு பருவமழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலவும் ‘எல் நினோ’ வானிலை பருவமழை சுழற்சியை பாதிக்கக்கூடும். டிசம்பர் மாதத்தில் அதிக வறண்ட காலங்கள் நிலவக்கூடும். நம் பகுதி மழைப்பொழிவில் பாதியளவு வடகிழக்கு பருவமழை பங்களிப்பு ஆகும். தற்போதைய மழைப்பொழிவின் போது, விவசாயிகள் உபரி மழை நீரை சேகரித்து, வறண்ட காலங்களில், கூடுதல் நீர் பாசனத்துக்கு பண்ணை குளத்தில் சேமித்து வைக்கலாம்.
மானாவாரி பகுதிகளில், மண் ஈரப்பதத்தை பாதுகாக்க, மூடாக்கு இடலாம். வரப்பு அமைக்கலாம். மழைநீர் தேங்குவதை சமாளிக்க, போதிய வடிகால் வசதி செய்ய வேண்டும். பயறு வகைகளுக்கு நுண்ணுாட்டல் கலவை உரம் அடி உரம் ஆக இடலாம்.
பருத்தி பயிரில் பருத்தி நுண்ணுாட்டம் கலவை உரம் அடி உரமாக இடலாம். மேலும், பூக்கும் மற்றும் காய் பருவங்களில், ஏக்கருக்கு, 5 கிலோ என்ற அளவில் காட்டன் பிளஸ் மருந்தை, இருமுறை, ஒரு மாத இடைவெளியில் தெளிப்பதால், பூக்கள் மற்றும் காய்கள் உதிர்ந்து விழுவது குறைகிறது. காய்கள் வெடிப்பது மேம்படும். இந்த மேலாண்மை முறைகளை கையாண்டு நல்ல மகசூல் பெறலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
