/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள்... விறுவிறு! விழிப்புணர்வுக்கு 'செல்பி பாயின்ட்'
/
லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள்... விறுவிறு! விழிப்புணர்வுக்கு 'செல்பி பாயின்ட்'
லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள்... விறுவிறு! விழிப்புணர்வுக்கு 'செல்பி பாயின்ட்'
லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள்... விறுவிறு! விழிப்புணர்வுக்கு 'செல்பி பாயின்ட்'
UPDATED : மார் 15, 2024 02:14 AM
ADDED : மார் 15, 2024 12:50 AM

கோவை;லோக்சபா தேர்தல் பணிக்கு நியமித்துள்ள பறக்கும் படையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அறை தயாராகி வருகிறது. 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, 'செல்பி பாயின்ட்' அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக் கிறது. எந்நேரம் அறிவித்தாலும், அதற்கான வேலைகளை துவக்க, கோவை மாவட்ட தேர்தல் பிரிவினர் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில், 1,015 இடங்களில், 3,077 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 13 இடங்களில், 1,500 வாக்காளர்களுக்கு அதிகமான ஓட்டுச்சாவடி அமைகிறது; இங்கு துணை ஓட்டுச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம், 288 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுவினருக்கு, அந்தந்த சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் அறிவுரை வழங்கப்பட்டது.
மிக முக்கியமாக, இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு இருக்கிறதா என, வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடந்த தேர்தலில், 40 சதவீதத்துக்கு கீழாக ஓட்டுப்பதிவான பூத்களில், வாக்காளர்கள் ஏன் ஓட்டுப்போட வரவில்லை என கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மண்டல குழுக்களில், போலீஸ் ஸ்டேஷன் வாரியாக, சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலான அதிகாரிகள், 288 பேர். 'செக்டார் ஆபீசர்'களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 'ரிசர்வ்' அடிப்படையில், 28 பேர் உள்ளனர்.
128 இடங்களில், 469 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு உள்ளன. இவற்றின் பட்டியல், அந்தந்த சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
ஒரு தொகுதிக்கு மூன்று வீதம், 10 தொகுதிகளுக்கு, 30 பறக்கும் படைகள், 30 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள்ளன. 8 மணி நேரத்துக்கு ஒரு ஷிப்ட் வீதம் மூன்று ஷிப்ட்டுகளாக இக்குழுவினர் பணிபுரிய உள்ளனர்.
இக்குழுவில் இடம் பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது; தனி துணை கலெக்டர் சுரேஷ் பயிற்சி அளித்தார்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து எந்த தகவல் வந்தாலும், அதை உறுதிப்படுத்தி, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கையை தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தல் பணியில் சுய விருப்பு வெறுப்பு காட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில், வாக்காளர்கள் உறுதி மொழி ஏற்கும் கையெழுத்து இயக்கம் மற்றும் 'செல்பி பாயிண்ட்', மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்தி குமார் நேற்று துவக்கி வைத்தார். பலரும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.
தேர்தல் தேதி அறிவித்த பின், 'டிவி'க்களில் ஒளிப்பரப்பாகும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை கண்காணிக்க, கலெக்டர் அலுவலக வளாகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறையில், 9 'டிவி'க்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு 'டிவி'யி லும் ஒரே நேரத்தில் நான்கு சேனல்கள் பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு தேர்தல் ஏற்பாடுகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

