/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்பு கடிதம்... விஷயம் இல்லை... விசேஷம்!
/
அன்பு கடிதம்... விஷயம் இல்லை... விசேஷம்!
ADDED : அக் 12, 2024 11:24 PM

வரிசைகட்டி அமர்ந்திருந்த குட்டீஸ்களிடம், கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர், ஒரு கேள்வி கேட்கிறார்.
உங்களுக்கு பிடித்த தலைவர் யார்? என்று.
சட்டென்று ஒரு மாணவி சொல்கிறார்... விஜயகாந்த் என்று.
ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினருக்கு தாங்க முடியவில்லை சிரிப்பு.
இது அடங்க நீண்ட நேரம் பிடித்தது.
சற்றே திகைத்த முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர், சுதாரித்து, சில உதாரணங்களை சொல்லி, உங்களுக்கு பிடித்த தலைவர் யார் என்று மறுபடியும் கேட்க, தேசத் தலைவர்களின் பெயர்களை சொன்னார்கள் குழந்தைகள்.
அன்றைய தினம் கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்தது அஞ்சல் தலை கண்காட்சி மற்றும் கடிதம் எழுதும் போட்டி நடந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த அஞ்சல் தலை, அதற்கு பின்னணியில் உள்ள வரலாறு குறித்து ஒவ்வொன்றாக விளக்கி வந்தார், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்.
சுதந்திரத்துக்கு முன் இருந்த நாணயங்கள், இந்தியாவின் பெருமை என்ற தலைப்பில், முக்கிய இடங்களை பதித்த தபால் தலை குறித்து அறிந்துகொள்ள குழந்தைகள் ஆர்வம் காட்டினர். இன்றைய நவீன யுகத்தில், கடிதம் எழுதுவது குறைந்தே போனது. அதை குழந்தைகளிடம் மீண்டும் கொண்டு வர, 'உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு கடிதம் எழுதுங்கள், முகவரி எழுதுங்கள். அது, உங்கள் பெற்றோருக்கு இருந்தாலும் சரி, நண்பர்களுக்கு இருந்தாலும் சரி' என, குழந்தைகளிடம் சொல்லப்பட்டது.
100க்கும் மேற்பட்ட குழந்தைகள், தங்கள் மனதில் பட்டதை எழுதி, அங்கு வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியில் சேர்த்தனர். 'டேய்... நா உனக்கு தா லெட்டர் எழுதி இருக்கேன். சீக்கிரம் உங்க வீட்டுக்கு வந்துரும்; பாத்ததுக்கு அப்புறம் நீயும் எனக்கு லெட்டர் போடு' என, தங்கள் மழலை மொழியில் பேசியது ஆச்சரியம்.
பழைய விஷயங்களை அப்படியே விட்டு விடாமல், மீண்டு (ம்) கொண்டு வர இதுபோன்று மேற்கொள்ளும் முயற்சி, நிச்சயம் பலன் தரும். ஆசிரியர்களும், பெற்றோரும், புதியன புகுதல் முயற்சிக்கு பாடுபடும் அதே வேளையில், பழையன கழிதலை மறந்து போகாமல், மீண்டும் உயிர் பெறச் செய்தால், குழந்தைகள் மனதிலும் மாற்றம் ஏற்படும்.